8

தற்போது நூற்றுக்கு 27, 28 விகிதமாக உள்ள நாட்டின் வனப்பிரதேசத்தை அடுத்த நான்கு வருடங்களில் 32 விகிதமாக அதிகரிப்பது சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில் தனது திட்டமாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

உலகிலுள்ள ஏனைய நாடுகளில் போன்று எமது நாட்டிலும் காலநிலை மாற்றங்களினால் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் சவால்களுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பசுமை பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உயிர்வாயு, சேதனப் பசளை, பசுமை விவசாயம் மற்றும் சூரிய மின் சக்தி திட்டத்தை இன்று (27) முற்பகல் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பாடசாலையில் கிடைக்கும் பாடத்திட்டக் கல்வியைப் போன்றே அதற்கு வெளியிலிருந்து கிடைக்கும் அறிவு மற்றும் திறன்களை தமது நாளாந்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி, மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் செயற்படுவதற்கு மாணவர்கள் சிறுபராயம் முதல் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சக்திவலுவின் முக்கியத்துவத்தை அனைவரும் இன்று நன்றாக அறிந்துகொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொலன்னறுவையில் உள்ள தனது வீடும் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமும் சூரிய சக்திக்கு மாற்றப்பட்டு தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரத்தை வழங்குவதாகத் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு பங்களிக்கக்கூடிய பிள்ளைகள் தமது வீடுகளையும் அதற்குத் தயாராக்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொருளாதார சுதந்திரத்தை அடைவது அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் மட்டும் உரியதல்ல. பாடசாலை பிள்ளைகள் முதல் அனைத்து பிரஜைகளும் அதற்காக பங்களிப்பு வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பசுமை உதயம் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்களித்தவர்களுக்கான விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.

அமைச்சர்களான ரஞ்சித் சியாம்பளாபிடிய, மாலைதீவு, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர் இயோன் ரோட் உள்ளிட்ட அதிதிகளும் ஆனந்தா கல்லூரியின் அதிபர் எஸ்.எம் கீர்த்திரத்ன, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

3 2 6 4 7 5 9 10 11 12 13

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்