8

அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும் என்று  ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 

ஆசியாவின் சக்தியை ஒடுக்குவதற்கு வேறு எந்த வெளிச் சக்திகளுக்கும் இடமளிக்க கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். இன்று (15) தஜிகிஸ்தான், துஷன்பே நௌருஸ் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் (CICA)  கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

 

சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின், ரஷ்ய ஜனாதிபதி விலடிமிர் புடின், துருக்கி ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோர் உள்ளிட்ட ஆசியாவின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் அவர்களின் தலைமையில் இம்மாநாடு ஆரம்பமானது.

 

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல் பற்றி இங்கு மிகுந்த வேதனையுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இலங்கை அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான பலம் தெளிவாகவுள்ளது என்றும் தெரிவித்தார். உறுப்பு நாடுகள் என்ற வகையில் இந்த பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்வதற்கு எமக்கு மத்தியிலான சகோதரத்துவமும் பிணைப்பும் மிகவும் அவசியமானதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமும் ஜனநாயகமும் மிகவும் முக்கியமானதாகும் என்றும் நாடுகளின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டுப்படுத்தவோ நாடுகளின் மீது அச்சுறுத்தல்கள், அழுத்தங்களை ஒருபோதும் பிரயோகிக்கவோ கூடாது என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்

 

ஆசியாவில் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் உறுப்பு நாடுகளின் பொருளாதார வர்த்தக கொள்கைகள் எப்போதும் எளிமையானதாக இருக்க வேண்டும் என்றும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் கொள்கைகளை பலப்படுத்த வேண்டும் என்றும்  ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார். \

 

ஆசியாவில் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் பலப்படுத்தி அடுத்த நூற்றாண்டில் ஆசியாவை வறுமையிலிருந்து முழுமையாக விடுபட்ட ஆசியாவாக ஆக்குவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்

ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய மாநாடு CICA ஆனது, ஆசியாவில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு அவசியமான ஆசியாவின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கும் நோக்குடன் 1992 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட பல்-தேசிய மாநாடாகும்.

 

இலங்கை CICAயின் அவதானிப்பு நாடொன்றாக 2012ஆம் ஆண்டிலிருந்து செயற்படுகின்றது. இலங்கையானது, ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டின் ஒரு உறுப்பினராக அதன் 26 உறுப்பு நாடுகளால், 2018 ஆகஸ்ட் 15ஆம் திகதி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

CICA யின் உறுப்பு நாடுகளில் ஆப்கானிஸ்தான், அஸர்பைஜான், பஹ்ரைன், வங்காளதேசம், கம்போடியா, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மொங்கோலியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், கட்டார், கொரிய குடியரசு, ரஷ்யா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், உஸ்பகிஸ்தான், மற்றும் வியட்நாம் ஆகியன உள்ளடக்குகின்றன. உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் CICA யின் ஏனைய உறுப்பு நாடுகளிலுள்ள மக்களுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை மேம்படுத்த இந்த மாநாடு மிகவும் முக்கியமானது என்பதுடன், இது பற்றி ஜனாதிபதி அவர்கள் மாநாட்டில் விசேடமாக சுட்டிக்காட்டினார்.

1

2

3

4

5

6

7

9

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்