01 (34)

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

அத்துடன் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி அவர்களின் கீழ் செயற்படும் நிறுவனமான தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஐந்து பில்லியன் ரூபா வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

அனர்த்த நிலைமையினால் பூரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக மாதாந்தம் 7500 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு நிதியுதவி வழங்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அச்செயற்பாடு துரிதமாக ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அனர்த்தத்திற்கு பின்னரான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.

 

இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு உள்ளிட்ட அனர்த்தத்திற்கு உள்ளாகிய மாவட்டங்களின் மாவட்ட அதிபர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன், மாவட்ட மட்டத்தில் செயற்படுத்தப்படும் நிவாரண செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்தனர்.

 

சேதமடைந்த வளங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான மதிப்பீடுகளை பெற்றுக்கொள்வதைப் போன்று மீள் குடியேற்றத்திற்கான காணிகளை இனங்காணல் மற்றும் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளும் தற்போது அரசினால் மேற்கொள்ளப்படுவதுடன், அவற்றை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், மதிப்பீட்டு உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படின் நிரல் அமைச்சுக்கள் மற்றும் மாகாண அமைச்சுக்களின் ஊடாக அவர்களது சேவையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும்  அது தொடர்பாக தெரியப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

சேதமடைந்த பாடசாலை கட்டமைப்புக்களை புனரமைத்தல் மற்றும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக செயற்படுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி செயற்பாட்டில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

 

அனர்த்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு உதவிகளை பகிர்ந்தளித்தல் முறையான விதத்தில் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், அவை பகிர்ந்தளிக்கப்பட்ட விதம் தொடர்பாக மக்கள் அறிவுறுத்தப்பட வேண்டுமெனவும் இது பற்றிய பூரண அறிக்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

 

அத்துடன் நிவாரணமாக கிடைத்த அன்றாட உபயோகத்திற்கான பொருட்களை களஞ்சியங்களில் சேமித்து வைக்காது மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

 

பாதிக்கப்பட்ட பயிர்ச் செய்கைகளுக்கான நட்டஈடு வழங்குதல், அனர்த்தத்திற்குள்ளான சிறிய அளவிலான வியாபாரங்களுக்கு நட்ட ஈடு வழங்குதல், மின் சக்தி, குடிநீர், பெருந்தெருக்கள் உள்ளிட்ட சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை புனர்நிர்மாணம் செய்தல், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுத்தப்படுத்தல், மக்களின் சுகாதார நிலைமையை பாதுகாத்தல் மற்றும் பிரதேச மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்குதல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, வஜிர அபேவர்தன, சுசில் பிரேம ஜயந்த, மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, சஜித் பிரேமதாச, சாகல ரத்னாயக்க, கயந்த கருணாதிலக்க, தயா கமகே, தலதா அத்துகோரல, சந்திம வீரக்கொடி, பைசர் முஸ்தபா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும், அரச அதிகாரிகளும், முப்படை தளபதிகளும், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்