02 (22)

அனைத்து நாடுகளுடனும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதனூடாக பொருளாதார முன்னேற்றத்தை துரிதமாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க காங்கிரஸின்  நீதி செயற்பாட்டு மேற்பார்வைக் குழுவின் தலைவர் டீழடி புழழனடயவவந உள்ளிட்ட அமெரிக்க உயர் பிரதிநிதிகள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட்டு அரசாங்கத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியை பாராட்டிய காங்கிரஸ் உறுப்பினர்கள், தற்போது மேற்கொண்டுவரும்  நல்லிணக்க செயற்பாடுகள், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார கொள்கைகளையும் பாராட்டினார்கள்.

 

ஐக்கிய அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையின் புதிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.

 

நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்படுவதனைத் தவிர்த்து, நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், நாட்டில் நல்லிணக்கத்தை பலப்படுத்துதல், மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி அனைத்து மக்களும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே  தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகுமெனவும் தெரிவித்தார்.

 

புவியியல் ரீதியில் இலங்கை முக்கிய அமைவிடத்திலுள்ளதனால் கப்பல் போக்குவரத்தில் மட்டுமன்றி இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பிலும் பங்களிப்பு செய்யமுடியுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இலங்கை பாரிய வெளிநாட்டு முதலீட்டு உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் கவனமெடுப்பதாக தெரிவித்தார்.

 

இலங்கை படையினருக்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புக்கள் கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் மீண்டும் அந்த வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், விசேடமாக கடற்படையினருக்கான பயிற்சிகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

 

அதிகளவிலான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நாட்டுக்கு வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதுவொரு முக்கியமான சந்தர்ப்பமென குறிப்பிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், அடுத்த அமெரிக்க விஜயத்தின் போது காங்கிரஸ் பேரவைக்கும் வருகை தருமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்