Presidential Media Unit Default Banner

அரச கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை நியமிக்கும்போது ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயமாகுமென ஜனாதிபதி அவர்கள் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் 2018.12.31ஆம் திகதி PS/PCMD/19/2018 இலக்கமுடைய மேற்குறிப்பிட்ட சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழுக்களை நியமிக்கும்போது தகைமைகளை பரிசீலித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கும் அண்மையில் ஜனாதிபதி அவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமை வகிக்கும் அக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் டப்.ஜே.எஸ். கருணாரத்ன மற்றும் பிரதமரால் நியமிக்கப்பட்ட இரு பிரதிநிதிகளும் நிதி அமைச்சின் செயலாளரின் பிரதிநிதியும் செயற்படுவர்.

 

தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களின் பெயர்களை தகைமைகளை பரிசீலித்து பரிந்துரைகளை பெறுவதற்காக இக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் இது தொடர்பில் சகல அமைச்சர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவித்தல் விடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சுக்களின் செயலாளர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அரசாங்க வாகனங்கள் தொடர்பில் முறையான அறிக்கைகள் பேணப்படாமையினால் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அரசாங்க வாகனங்களின் எண்ணிக்கைகள் தொடர்பிலான தகவல்களை சரிவர பேணுவதற்காக நிதி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் தெரிவித்தார். அரசாங்க வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பிலான தகவல்களை இணையத்தளத்தின் ஊடாக யாராக இருந்தாலும் கண்டறியக்கூடிய வகையில் அத்தகவல்கள் பேணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது தங்களது அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு சென்று பணிக்குழாமினரை சந்தித்து அவற்றின் செயற்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு அனைத்து அமைச்சுக்களினதும் ஒத்துழைப்பு கிடைக்கப்பட வேண்டியதுடன், அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவொன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கடந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபங்களுக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுப்படுத்தினார்.

 

வறுமை ஒழிப்புக்காக  இதன்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமசக்தி மக்கள் அமைப்பினை எதிர்காலத்தில் விரிவானதொரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், அதனை வெற்றி பெறச் செய்வதற்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் இன்றியமையாததென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நலனுக்காகவும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி செயற்திட்டங்களின் பெறுபேறுகளையும் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதோடு, 2020ஆம் ஆண்டிற்கான அரசின் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்காக அனைத்து தரப்பினரும் தத்தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரிவர நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

 

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்