Presidential Media Unit Default Banner

தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயின் அவர்களின் விசேட அழைப்பினை ஏற்று தென் கொரியாவிற்கான மூன்று நாள் அரச முறை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இருநாடுகளுக்கிடையிலான நட்புற​வை பலப்படுத்தி நாட்டிற்கு பல பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொண்டு தனது அரசமுறை விஜயத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்று (30) இரவு மீண்டும் நாடு திரும்பினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் நிறைவடைவதனை முக்கிய மைல்கல்லாக கொண்டாடிய அரச தலைவர்கள், இரு நாட்டு நட்புறவையும் பலப்படுத்துவது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவினையும் ஒத்துழைப்புக்களையும் புதியதொரு பரிணாமத்துக்கு கொண்டு செல்லவும் அரச தலைவர்கள் இதன்போது உறுதி பூண்டனர்.

இரு நாடுகளுக்கும் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பொருளாதார துறையின் ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் பொருளாதார உடன்படிக்கையும் அரச தலைவர்களின் சந்திப்பின் பின்னர் கைச்சாத்திடப்பட்டதுடன், இரு தரப்பு முதலீடுகள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டிற்கான ஒன்றிணைந்த பேரவை ஒன்றினை ஸ்தாபிப்பதற்கும் இந்த உடன்படிக்கையினூடாக இணக்கம் காணப்பட்டது.

கொரிய வர்த்தக – முதலீட்டு மேம்பாட்டு முகவராண்மை மற்றும் இலங்கை முதலீட்டு சபை என்பவற்றிற்கிடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டதுடன், கொரிய மற்றும் இலங்கை நிறுவனங்களிற்கான முதலீட்டு வாய்ப்புக்களை மேலும் விரிவுபடுத்த இதனூடாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி அவர்கள் தமது விஜயத்தின் போது கலந்து கொண்டார்.

அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தினை 2017 –2019 காலப்பகுதியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கான உடன்படிக்கையும் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டது.

தொழில் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பான உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டதுடன், தென்கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு எதிர்காலத்தில் பல அனுகூலங்களை இதனூடாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.

தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம், மருத்துவத் துறை உடன்படிக்கைகளில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால வளர்ச்சி தொடர்பாக பாராட்டுத் தெரிவித்த அரச தலைவர்கள், விஞ்ஞான தொழில்நுட்பம், புத்தாக்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் காணப்படும் உடன்படிக்கைகளை மேலும் விரிவுபடுத்தவும் இணக்கம் தெரிவித்தனர். சர்வதேச விவசாயம் பற்றிய கொரிய நிகழ்ச்சித்திட்டம் (KOPIA) மற்றும் ஆசிய உணவு, விவசாய ஒத்துழைப்பு செயற்திட்டம் (AFACI) என்பவற்றின் கீழ் விவசாயத்துறையில் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

மேலும் பிராந்திய செயற்பாடுகள் தொடர்பாக விரிவான கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்ட அரச தலைவர்கள், சர்வதேச அமைப்புகளுக்கான முறையான தேர்வுகள், காலநிலை மாற்றம் மற்றும் பேண்தகு அபிவிருத்தி போன்ற உலகளாவிய விடயங்கள் தொடர்பாகவும் பல்தரப்பு உடன்படிக்கைகளை மேம்படுத்தவும் இணக்கம் தெரிவித்தனர்.

தேசத்தை மீளக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மூன் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.

தமக்கிடையேயான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்களை செயற்படுத்தும்போது அவை இரு நாடுகளுக்கிடையிலும் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்கை ரீதியான கலந்துரையாடல்களின் மூலம் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அரச தலைவர்கள் வலியுறுத்தியதுடன், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பினை தென் கொரிய ஜனாதிபதி மூன் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

தென் கொரிய ஜனாதிபதி அவர்களால் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கப்பட்ட விசேட நட்பு ரீதியான வரவேற்பு இவ்விஜயத்தின் விசேட நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

சம்பிரதாயபூர்வமான உத்தியோகபூர்வ சந்திப்பிற்கு முன்னரே ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை நட்பு முறையில் சந்தித்து அளவளாவிய தென் கொரிய ஜனாதிபதி அவர்கள் இரு நாட்டிற்கும் இடையிலான நட்பினை புதியதொரு பரிணாமத்தில் ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதனிடையே சியோல் மெட்ரோபொலிட்டன் நகரின் கெளரவ குடியுரிமை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டமை குறித்த நட்பு ரீதியான சந்திப்பிற்கு வழங்கப்பட்ட கெளரவமாகக் கருதப்படுகின்றது.

தென் கொரியாவில் வதியும் இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், பிரசித்தி பெற்ற ஜோங்யேசா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தாய் நாட்டிற்காக உயிர் நீத்த தென் கொரிய இராணுவர்களின் நினைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கும் மலரஞ்சலி செலுத்தினார்.

கொரிய – இலங்கை பாராளுமன்ற நட்புறவுக் குழுவினரும் சியோல் நகரில் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்தனர்.

தனது மூன்று நாள் அரச முறை தென் கொரிய விஜயத்தினைப் பூர்த்தி செய்த ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இன்சோன் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான பிரியாவிடை நிகழ்வினையும் அந்நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்