01 (11)

ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தற்போது இலங்கையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும், அனுபவம்மிக்க தலைவரான இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அவர்கள் ஒட்டுமொத்த அரச தலைவர்களுக்கும் பெருமைமிகு முன்னுதாரணம் என்றும் பங்களாதேஷ் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கு மூன்று நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் Shirin Sharmin Chaudhur அம்மையாருக்கும் இடையில் இன்று (14) பிற்பகல் டாக்கா நகரில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரு நாட்டின் பாராளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளினதும் பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய அனுபவங்களை பரிமாறிக்கொள்ளவதற்கான புதிய செயற்திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்றத்தை பலப்படுத்த வேண்டியதுடன் அதன் தரத்தை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

தனது அபரிமிதமான அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கியதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், தனது அதிகாரங்களை மேலும் பாராளுமன்றத்திற்கு வழங்கவும் தாம் தயாராக இருந்தபோதிலும் உயர் நீதிமன்றத்தினால் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தம்மால் மேற்கொள்ள முடிந்ததென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரச தலைவருக்கு காணப்பட்ட தீங்கிழைக்கக்கூடிய அதீத அதிகாரங்கள் பலவற்றை நீக்கி சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கியதன் மூலம் ஜனநாயகத்தின் புதியதொரு புரட்சியை இலங்கையில் ஏற்படுத்த முடிந்ததென தெரிவித்தார்.

அதன்பின்னர் பங்களாதேஷின் எதிர்க்கட்சித் தலைவியான Rowsha Ershad அம்மையார் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்தார்.

ஜனநாயக நாடொன்றில் அரசாங்கத்தைப் போன்றே எதிர்க்கட்சியும் மிகவும் முக்கியமானதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் நாட்டில் பலமான எதிர்க்கட்சி காணப்பட வேண்டும் என்றும், அதனூடாவே அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

பங்களாதேஷில் பல உயர் பதவிகள் பெண்களால் வகிக்கப்படுவதை பாராட்டியதுடன், இலங்கை பாராளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களினால் இரு நாடுகளும் ஒரே வகையான பிரச்சினைகளையே எதிர்நோக்கியுள்ளதுடன், ஒரே வலயத்தில் அமைந்துள்ள நாடுகள் என்ற வகையில் ஏனைய பொது பிரச்சினைகளும் ஒரே மாதிரியாகக் காணப்படுவதனால் அவற்றிற்கான தீர்வுகளை இனங்காண்பதற்கு ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வாய்ப்பு இருப்பது குறித்தும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

பின்னர் பங்களாதேஷின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் மொஹமட் நிசாமை ஜனாதிபதி அவர்கள் சந்தித்தார்.

பங்களாதேஷின் மருந்து உற்பத்தியின் தரம் தொடர்பாக பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் அவ்வுற்பத்திகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கு தான் சுகாதார அமைச்சராக இருந்தபோது ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதாகவும் குறிப்பிட்டார்.

பங்களாதேஷின் மருந்து உற்பத்தி ​தொழிற்சாலையொன்றினை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்து வருவதாகவும் பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

டெங்கு நோய் நிவாரணம் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பிரச்சினைகளில் இணைந்து செயற்படுதல் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் தாதியர்களை பயிற்றுவிக்கும் செயற்திட்டங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தற்போது மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை காணப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் தான் சுகாதார அமைச்சராக பணியாற்றியபோது  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அதற்கு ஏதுவாக அமைந்ததென்றும், புகைத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்தார்.

அன்று புகையிலை நிறுவனங்களுடன் சவால்மிக்க போராட்டத்தில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள் அப்போதைய தலைவர்கள் புகையிலை நிறுவனங்களுக்கு முன்பாக தம்மை இழிவுபடுத்திய போதிலும் அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடாது தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் புகையிலை உற்பத்திகளின் உறைகளில் சுகாதார எச்சரிக்கைகளை எண்பது சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

02 (9)

02 (10)

02 (11)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்