01

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜேர்மன் அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்குமென ஜேர்மன் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

ஜேர்மனியில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஜேர்மன் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் Gerd Muller அவர்களுக்குமிடையிடையிலான சந்திப்பு இன்று (18) இடம்பெற்றதுடன் அதன்போது பொருளாதார அலுவல்கள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் ஜேர்மனிக்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும் இரண்டு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடப்பட்டது.

தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக ஜேர்மன் 18 யூரோ மில்லியன் (2883 மில்லியன் ரூபா) நிதி உதவியை இலங்கைக்கு வழங்கவுள்ளது.

வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வலயங்களின் முகாமைத்துவத்துக்காக 6 மில்லியன் யூரோ நிதியுதவி இதன் கீழ் வழங்கப்படுவதுடன், வட மாகாணத்தின் தொழில் பயிற்சிக்காக 4 மில்லியன் யூரோ நிதியுதவி கிடைக்கவுள்ளது.

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவு வணிக அபிவிருத்திக்கும் நிதியுதவி கிடைக்கப்பெறுவதுடன் சமூக ஒருமைப்பாட்டுக்காகவும் வசதியளிக்கப்படும்.

அத்துடன் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவு வணிக அபிவிருத்திக்காக ஜேர்மனியின் சிறிய மற்றும் நடுத்தர அளவு வணிக அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினை மையமாகக்கொண்ட இவ்வொப்பந்தத்தின் மூலம் முகாமைத்துவநுட்பங்கள், வடிவமைப்பு மாற்றங்கள், இயலுமை நுகர்வு போன்ற விடயப் பரப்புக்களில் புடவைக் கைத்தொழில் துறையில் தொழில்நுட்ப இயலுமையை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்மூலம் தொழில்நுட்ப திறன்விருத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம், தகவல் தொழில்நுட்ப பாவனை, சந்தை ஆராய்ச்சி மற்றும் புடவைக் கைத்தொழில் துறையின் பல்வேறு கற்கைகள் தொடர்பில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

அவ்வாறே ஆயுர்வேத, தாவரச்சாறு, மலர் உற்பத்தி, மின் உபகரணங்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், லெதர், கடல் உணவு, பான வகைகள் போன்றன சிறிய மற்றும் நடுத்தர அளவு கைத்தொழில் உற்பத்திப் பொருட்களாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு விருத்தி செய்யப்படும்.

இலங்கையின் சார்பில் அபிவிருத்தி உபாய வழிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அவர்கள் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.

இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சிறந்ததொரு பொருளாதாரம் அவசியமாக உள்ளதென தெரிவித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அதற்காக ஜேர்மன் அரசாங்கத்தின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

விசேடமாக இலங்கையின் விவசாயம், மீன்பிடி, சுற்றுலா ஆகிய கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காக ஜேர்மனியின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் 20 வீதமானோரும் ஏனைய பிரதேசங்களில் 7 வீதமானோரும் வேலையின்றி இருப்பதுடன் உற்பத்தித்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் அதற்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கையின் கால்நடை வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் ஜேர்மன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் வேண்டுகோள்விடுத்தார்.

அதற்கும் தனது சம்மதத்தை தெரிவித்த ஜேர்மன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், இலங்கையின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜேர்மன் அரசாங்கத்தின் ஒத்துழைப்பினை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

GSP+ நிவாரணத்தை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் சுமூகமான ஒரு நிலைமை எதிர்காலத்தில் ஏற்படுமென ஜேர்மன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

தான் எதிர்வரும் மே மாதத்தில் ஜேர்மனியின் முன்னணி முதலீட்டாளர்களுடன் இலங்கைக்கு வருவதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

பிரதான இரண்டு அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் போற்றத்தக்கதென தெரிவித்த அமைச்சர் அவர்கள், இதன் மூலம் ஜேர்மனிக்கு பல்வேறு முன்மாதிரிகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்தார்.

அத்துடன் ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் திருமதி Dagmar Wohrl  அவர்களும் இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.

தான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் அதன்போது இலங்கையின் உண்மையான நிலைமையினை கண்கூடாக பார்த்தேன் எனவும் தெரிவித்த தெரிவுக்குழுவின் தலைவர், அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு வருகை தர எதிர்பார்ப்பதாகவும் அதன்போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

01 (3)
01 (1)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்