02 (11)

இலங்கையின் வரட்சி நிவாரணப் பணிகளுக்கு தென் கொரியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த கொரிய பாராளுமன்ற தூதுக்குழு எட்டு தண்ணீர் பௌஸர்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கையளித்தது.

கொரிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தலைவர்களான கொரிய தேசிய பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் Hong Moon-jong மற்றும் Yoo Ki-june ஆகியோர் தண்ணீர் பௌஸர்களுக்கான திறப்புகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கொரியத் தூதுவர் Won-sam Chang ஆகியோர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்தமைக்காக தென்கொரிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நன்றி தெரிவித்தார்.

நாட்டின் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வரட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டு மக்களுக்கு நீர் தேவையாக உள்ள நிலையில், கொரிய அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த பௌஸர்கள் மிகவும் பயனுடையதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த பௌஸர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

கொரியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நெருங்கிய இருதரப்பு கூட்டுறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சுமார் 30 ஆயிரம் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியிருப்பதற்காக கொரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

சர்வதேச மன்றங்களில் கொரிய குடியரசுக்கு இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு தூதுக்குழுவின் தலைவர் Hong Moon-jong நன்றி தெரிவித்தார். இலங்கை தொழிலாளர்களது தொழிற்திறமைகள் குறித்து கொரிய தொழிற்தருனர்கள் திருப்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டு நாடுகளுக்கிடையிலும் இருதரப்பு உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40ஆவது ஆண்டை நினைவுகூறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகத் தூதுக்குழுவொன்று இலங்கை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தீவு நாடான இலங்கை கடல்வளங்களில் இருந்து அதிக பயன்பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்த கொரியாவின் முன்னாள் சமுத்திர விவகார அமைச்சர் Yoo Ki-june இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு கொரியாவின் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மீன்பிடித்தொழிற்துறையின் கூட்டுறவை கொரிய சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தினூடாக (KOICA) ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர்  தெரிவித்தார்.

இந்த முன்மொழிவை வரவேற்ற ஜனாதிபதி, கொரிய தொழில்நுட்ப உதவியுடன் இலங்கை ஐரோப்பாவுக்கும் ஏனைய நாடுகளுக்குமான மீன் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார். கொய்க்கா நிறுவனத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய பணிப்பாளர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

03 (10)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்