Thailand

இலங்கை விவசாயத்துறையின் அபிவிருத்திக்கு பல்வேறு புதிய நிகழ்ச்சித்திட்டங்களினூடாக உதவி வழங்க எதிர்பார்த்துள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்த  தாய்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் சூலமனி சட்சுவான் இது தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தெரிவித்தார்.

 

அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம் உள்ளிட்ட விவசாயத்துறைக்கான நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்த ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

குறிப்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், தாய்லாந்து அரசாங்கத்துடன் கட்டியெழுப்பியுள்ள நட்புறவை அடிப்படையாகக்கொண்டு தாய்லாந்து மன்னரின் பணிப்புரைக்கமைய இந்த உதவியை இலங்கைக்கு வழங்குவதாக தூதுவர் குறிப்பிட்டார்.

 

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு தாய்லாந்து அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் 2015 நவம்பர் மாதம் தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

 

அதன் பின்னர் 2016 ஒக்டோபர் மாதம் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி அவர்கள், தாய்லாந்துக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், அதற்கு ஒரு மாதத்தின் பின்னர் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாத் மன்னரின் மறைவை தொடர்ந்து மன்னரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதைச் செலுத்த ஜனாதிபதி அவர்கள் மீண்டும் தாய்லாந்திற்கு சென்றிருந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற மன்னரின் இறுதி கிரியைகளில் இலங்கை நாட்டின் விசேட பிரதிநிதி ஒருவரை பங்குபற்றச் செய்யவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

 

இந்த நெருங்கிய நட்புறவுக்கு நன்றிக்கடனாக தாய்லாந்தின் முன்னாள் அரசரான காலஞ்சென்ற பூமிபோல் அதுல்யாத் அவர்கள் ஆரம்பித்த திட்டங்களை இலங்கை வரை வியாபிப்பதற்கு தாய்லாந்தின் தற்போதைய மன்னரான வஜிரா லோன்ங்கோன் மன்னர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்