05

அதிகாரத்தில் இருந்த சிலர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவிக்கிறார்.

 

உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்த பொய் பிரச்சாரங்களில் ஏமாற வேண்டாமென உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு இன்று (25) பிற்பகல் கென்பரா நகரில் நடைபெற்றபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொழில்வாண்மையாளர்கள், வர்த்தக சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் இலங்கையர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த இலங்கை மக்கள் எதிர்பார்ப்பை உயர்ந்தபட்சம் நிறைவேற்றுவதற்கு தாம் பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.

 

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தையே மக்கள் எதிர்பார்த்ததாக நினைவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட தான் பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.

 

அத்துடன், நாட்டு மக்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்காக தெளிவான அபிவிருத்தி திட்டங்களையும், அனைத்து மக்களிடமும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாவண்ணம் நிலையான சமாதானத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

 

இந்தவேளையில் பிற்போக்குவாதிகள் அரசாங்கத்தை வெறுப்புக்குள்ளாக்கி, இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக தாய்நாட்டுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

சமாதானத்தை உருவாக்குவதற்காக எப்போதும் அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்வதுடன், எந்தவொரு கட்சியினரோ, சமயத்தினரோ, இனத்தவரோ சமாதானத்தை சீர்குலைக்க முற்பட்டால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்னிற்காதெனவும் ஜனாதிபதி அவர்கள். தெரிவித்தார்.

 

எந்த சவால்கள் வந்தாலும் மக்களுக்காக அரசாங்கம் முன்னோக்கி பயணிக்கும் எனவும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்கு தாய்நாட்டை நேசிக்கும் இலங்கைப் பிரஜைகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

இலங்கை அரச தலைவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்பு கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமது அரசாங்கத்தில் தெளிவான செயற்பாடுகள் காரணமாகவே அந்த அழைப்பு கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.

 

இப்போது எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக இல்லையென்பதுடன், உலகின் பலமிக்க நாடுகள் தொடக்கம் அனைத்து நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும், தனது அவுஸ்திரேலிய விஜயத்தை நிறைவு செய்து, நாட்டுக்கும் மக்களுக்கும் பெறுமதியான பல பரிசுகளுடன் தான் நாடு திரும்புவதாகவும் தெரிவித்தார்.

 

இந்த சந்திப்பில் ஜனாதிபதி அவர்கள் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.

06

04

01

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்