01 (9)

இன்று உலகிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கு ஆன்மீகத் தலைவர்களின் வழிகாட்டல் மிகவும் அவசியமானதாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 

அலரி மாளிகையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

‘இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவாலும்’ என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றுகின்றனர்.

 

அனைத்து இனங்கள் மற்றும் சமயங்களுடன் இணைந்து அனைத்து மனித உரிமைகளையும் மதித்து சுமூகமாக உலக மக்களுடன் செயற்படும் செய்தியை உலகிற்கு வழங்கும் நோக்குடன் இலங்கை இஸ்லாமிய நிலையத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

நாம் அனைவரும் ஒரே நாட்டில் இலங்கையர்களாக வாழ்வதற்கு உறுதிபூணுவோமானால் நாம் எதிர்பார்க்கும் அமைதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவது கடினமானதல்ல என்று ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.

 

தம்முடையதைப் போன்று அடுத்தவர்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் மதிப்பதன் மூலமே இன்று பேசப்படுகின்ற நல்லிணக்கத்தை யதார்த்தமாக மாற்ற முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி அனைத்து மக்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்தி இதனை ஒரே நாடாக கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

மனிதன் அதிகாரத்திற்காகவும் செல்வத்திற்காகவும் போராடியதன் இறுதி விளைவு மனிதன் மற்றைய மனிதனை அழிவுக்குட்படுத்தியமையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

உலகில் யுத்த நெருக்கடியை தவிர்ப்பதற்கு நாம் கலந்துரையாட வேண்டியது யுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அல்ல. யுத்தத்திற்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்களுடனேயாகும் என்று தான் நாம்புவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தமது நாட்டில் ஆயுதம் உற்பத்தி செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு அனைத்து அரசாங்கங்களுக்கும் முடியுமானால் அது உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

 

சபாநாயகர் கரு ஜயசூரிய,  அமைச்சர் அப்துல் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் ஹூசைன் முஹம்மது ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02 (10) 03 (6) 04 (6) 05 (4) 06 (2)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்