02

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக அந்த சட்ட வரைபு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்புக்கான உள்ளுராட்சி நிறுவன திட்டத்தை தயாரிப்பதற்காக இன்று (17) இலங்கை மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை என அரசியல் ரீதியிலும், ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், உண்மையில் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருக்கவில்லை. உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தல் தொடர்பில் முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த சட்டத்திலுள்ள முறைகேடுகள் மற்றும் ஒழுங்கற்ற தன்மை காரணமாகவே தேர்தலை நடத்த முடியாத நிலை உருவானதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் நிரந்தரமான விஞ்ஞானபூர்வமான திட்டத்தை அமுல்படுத்தவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரசியல் ரீதியான குறுகிய மனப்பாங்கின்றி மனச்சாட்சிக்மைய சிந்திக்கும் அனைவரும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும், இனிவரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கமும் முகம்கொடுக்க தேவையற்ற விதத்தில் நாட்டின் கழிவு பிரச்சினையை நிறைவு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

தமது நிறுவன அதிகாரத்துடன் உரியவாறு சேவையாற்றுவதற்கு நகரசபைத் தலைவர்களும் மாகாண செயலாளர்களும் பாடுபட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சில உள்ளுராட்சி நிறுவனங்கள் முன்னாள் தலைவர்களால்  இன்னமும்  இயக்கப்படுவதாகவும், அந்த நிறுவனங்களுக்குரிய வாகனங்கள் உள்ளிட்ட வளங்கள் அவர்களது தனிப்பட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரசியல் தலைமைத்துவத்தின் கருத்துக்களுக்கமைய அரச அலுவலர்கள் செயற்படுவது நாட்டின் கலாச்சாரமாக இருந்த போதிலும், தற்போது அவ்வாறான அழுத்தங்கள் இல்லை என்பதுடன், அனைத்து அரச அலுவலர்களுக்கும்  பொறுப்பையும், கடமையையும் சரியாகவும், முறையாகவும் நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி நிறுவனங்களின் செயலாளர் பதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பில் தொடர்புடைய அனைவரினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்று அடுத்த சில மாதங்களில் உரிய திட்டத்தை தயாரிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

”பேண்தகு யுகம் – தூய்மையான நகரம்” எனும் தொனிப்பொருளில் மாகாண சபைகள் மற்றும்  உள்ளுராட்சி அமைச்சினால் இக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறையான கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான முன்மொழிவுகள், விதந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை அமைச்சர் பைஷர் முஸ்தபா அவர்களால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மாகாண ஆளுனர்கள், முதலமைச்சர்கள், உள்ளுராட்சி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

09

08

07

05

04

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்