Maithripala Sirisena - 01

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை காவுகொள்ளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முகமாகவும் தேசத்தின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் குற்றவாளிகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைத்து தரப்பினரும் போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் நபர்களாவர் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

பொலன்னறுவை லங்காபுர விஜித்த மகா வித்தியாலயத்தில் இன்று (28) முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக தான் கையொப்பமிட்டதன் பின்புலத்தில் எவர் தொடர்பிலும் தனிப்பட்ட விரோதங்கள் இல்லையென்றும் சமூக நலன் கருத்தியே தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

அதனால் அந்த செயற்பாட்டினை வீழ்த்துவதற்கு யாரும் முயற்சிக்க கூடாதென்றும் நேற்றைய தினம் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டு இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டியதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்

 

சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதல்ல எனவும் இந்த கொடிய அச்சுறுத்தலில் இருந்து தேசத்தை விடுவிப்பதற்கு நீண்டகாலமாகவே தான் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், அந்த நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட தடைகளை ஜனாதிபதி என்ற வகையில் அனைவரினதும் பங்களிப்புடன் வெற்றிகரமான நிறைவை நோக்கி முன்னெடுத்து செல்வதாகவும் தெரிவித்தார்.

 

30 மில்லியன் ரூபா செலவில் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் லங்காபுர விஜித்த மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 15 வகுப்பறைகளைக் கொண்ட 3 மாடி கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் இன்று கையளித்தார்.

 

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டதுடன், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளையும் அவதானித்தார்.

 

பாடசாலை மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலைக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக 50 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பை ஜனாதிபதி அவர்கள் வழங்கினார்.

 

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாடசாலை அதிபர் ஆர்.டி.வீரசூரிய, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்