01

வடமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களை அண்டிய அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சேதமுற்றுள்ள 325 கிராமிய குளங்களை புனரமைக்கும் “எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்”  நிகழ்ச்சித்திட்டத்தை துரிதப்படுத்தி, குறித்த பிரதேசங்களில் உள்ள விவசாய சமூகத்திற்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

 

அக்குளங்களை அண்டிய கிராமிய மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டமொன்றும் அதனுடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் முன்னேற்ற நிலைமைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார்.

 

மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த “எழுச்சிபெறும் கிராமிய குளங்கள்” திட்டம் காலநிலை மாற்றத்திற்கு இசைவாக்கம் அடைவதற்கான இணைந்த நீர் முகாமைத்துவ திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகளை கண்டறிவதற்காக நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை வழங்கினார்.

 

சர்வதேச பசுமை காலநிலை நிதியம் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6664 மில்லியன் ரூபா நிதியினை வழங்கியுள்ளதுடன், ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் இத்திட்டத்திற்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குகின்றது.

 

இத்திட்டத்தின் மூலம் குறித்த வலயங்களில் உள்ள, தொடர்ச்சியாக வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகிவரும் குறைந்த வருமானம்பெறும் சுமார் 15 இலட்சம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு உதவி வழங்கப்படுகின்றது.

 

இலங்கை அரசாங்கம் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 2450 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. இத்திட்டம் 2024ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படவுள்ளது.

02

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்