1

ஒவ்வொரு குடும்பமும் போதைப்பழக்கமற்ற குடும்பமாக இருப்பதை உறுதிசெய்ய தாய்மார் முன்வர வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

குடும்ப கட்டமைப்பின் எதிர்கால சுபீட்சத்திற்கு முக்கிய தடையாக இருப்பது போதைப்பொருளாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தமது குடும்பத்தையும் சமூகத்தையும் இப்பழக்கமற்ற குடும்பமாக உறுதி செய்து ஆரோக்கியமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு தலைமைத்துவத்தை வழங்குமாறு தான் அனைத்து தாய்மார்களிடமும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று முற்பகல் காலி லபுதுவ ஸ்ரீ தம்ம வித்தியாலயத்தின் விளையாட்டரங்கில் இடம்பெற்ற தென்மாகாண தாய் ஆரோக்கிய சமூக நிகழ்ச்சித் திட்டத்தின் காலி மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தெற்கில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தைத் உருவாக்கும் நோக்குடன் தென்மாகாண முதலமைசர் சான் விஜேலால் த சில்வாவின் எண்ணக்கருவிற்கேற்ப இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தென் மாகாணத்தில் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பரவுவதைக் குறைத்தல், மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்தல், சிறுவர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசனை தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், சிசு மரண விகிதத்தைக் குறைத்தல், ஒழுக்கப் பண்பாடுகளுக்கு மக்களைப் பயிற்றுவித்தல், சூழல் பாதுகாப்புக்குப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுதல், வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளரின் எண்ணிக்கையைக் குறைத்தல், சுகாதாரத்துறை செலவுகளைக் குறைத்தல் என்பன இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்களாகும்.

தென்மாகாணத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ள தாய் சுகாதார சங்கங்களை மேலும் பலப்படுத்தி சுகாதாரத்துறையில் அனைத்து ஊழியர்களினதும் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாகாண முதலமைச்சர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

தென்மாகாண தாய்மார் சங்க பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் சீருடைகள் வழங்கப்பட்ட அதேவேளை ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தென்மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

5

4

3

2

6

11

10

8

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்