01

கடல்சார்ந்த சூழலை பாதுகாப்பதற்கான புதிய முறைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்குவதற்காக சமூகத்தின் சகல துறைகளினதும் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கடல்சார் சூழல் சபையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அச்சபை முதன் முறையாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்று கூடியது.

 

2008ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க சமுத்திர சூழல் மாசடைதலை தடுக்கும் சட்டத்திற்கமைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையானது, சமுத்திர சூழல் பாதுகாப்பு கொள்கைகள், சட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் செயற்திட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதிகார சபைக்கு அதன் அதிகாரங்களையும் செயற்பணிகளையும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைவேற்றுவதற்கும் உரிய விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குதலும் அதிகார சபையினால் சபைக்கு முன்வைக்கப்படும் ஏதேனும் விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குதலும் கடல்சார் சூழல் சபையின் செயற்பாடுகள் ஆகும்.

 

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் நிகழ்கால நடவடிக்கைகள் மற்றும் 2030ஆம் ஆண்டு வரையான அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் றியர் அட்மிரல் ரோஹன பெரேராவினால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் “தூய்மையான சமுத்திரங்கள் செயற்திட்டம் (Clean Seas Campaign) எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் வங்காள விரிகுடா வலய நாடுகளை இலக்காகக்கொண்டு நடைபெறவுள்ளதுடன் அதன் முக்கியமான நாடாக இலங்கையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

 

அதற்கமைவாக வழங்கப்பட்டுள்ள விரிவான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக கடல்சார் சூழல் சபையின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்தார்.

 

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வருடாந்த திட்டத்தினூடாக சபையின் நடவடிக்கைகளை முன்னோக்கிக்கொண்டு செல்லல் மிக முக்கியமாகும் என தெரிவித்தார்.

 

கடல்சார் சூழல் சபையின் தலைவர் எல்.பீ.ஜயம்பதி உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்