01 (10)

அரசாங்க மற்றும தனியர் துறைகளில் கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பான ஒரு தேசியக் கொள்கை துரிதமாக வகுக்கப்படவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) இடம்பெற்ற பசுமைக் கட்டிட வழிகாட்டி சஞ்சிகை மற்றும் மதிப்பீட்டு முறைமைகளை வெளியிட்டுவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

எமது நாடு ஒரு சிறிய தீவு என்றபோதும் துரிதமாக அதிகரித்துவரும் சனத்தொகை வளர்ச்சியுடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் வீடமைப்புக்காக ஒரு தேசியக் கொள்கை இல்லாத காரணத்தினால் பல்வேறு சவால்கள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்தவகையில் இன்னும் 25–30 வருடங்களாகும் போது விவசாயத்திற்கான நிலங்களின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு விவசாயத்துறையில் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரனங்களினதும் இயற்கையினதும் இருப்புக்காக எமது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்ற நாம் விரைவாக ஒன்றுபடவேண்டும்.

2017 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நிர்மாணத் துறையை பசுமையாக்குவதற்கான முதற் கட்டமாக அரசாங்கத் துறையில் உள்ள நிறுவனங்களின் கட்டிடங்கள் சூழல் நட்புடைய பசுமைக் கட்டிடங்களாக அமைப்பதற்கு ஜனாதிபதி அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை இணைந்து பசுமை கட்டிட வழிகாட்டி சஞ்சிகை மற்றும் பசுமை மதிப்பீட்டு முறைமையை தொகுத்துள்ளன.

இவ்வெளியீடு மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க ஆகியோரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்களுக்கு உரிய தெளிவினை வழங்கி இத்திட்டத்தை வெற்றிபெறச்செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது பொறியியலாளர்கள் மற்றும் நிர்மாணத் துறையிலுள்ள நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் உட்பட நிர்மாணத் துறை நிபுணர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02 (10) 04 (8) 05 (9) 06 (6) 07 (5) 08 (7) 11 (4)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்