Presidential Media Unit Default Banner

சர்வதேச நியமங்களுடன் கூடிய உள்ளக விளையாட்டரங்கு அனுபவத்தை கண்டி இளைஞர் யுவதிகளுக்கு வழங்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்டி மா நகர சபை உள்ளக விளையாட்டரங்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (03) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

145 வருடங்களாக மாடறுக்கும் தொழுவமாக இருந்துவந்த கண்டி சுதுஹும்பொலயில் உள்ள 80 பேர்ச்சஸ் விஸ்தீரணமான நிலத்தில் 220 மில்லியன் ரூபா செலவில் இந்த உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பேட்மின்டன், டேபல் டென்னிஸ், வொலிபோல் மற்றும் நெட்போல் ஆகிய விளையாட்டு வசதிகள், பார்வையாளர்களுக்கான 2000 ஆசன வசதிகள், மாநாடு மற்றும் விழா நிகழ்ச்சிகளுக்கான வசதிகள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான தங்குமிட வசதிகள் போன்றவற்றை இவ்விளையாட்டரங்கு கொண்டுள்ளது.

சமநிலையான உடல், உள ஆளுமையுடன் ஆரோக்கியமும் ஒழுக்கப் பண்பாடும் கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் கண்டி மாநகர சபையின் நிதி ஏற்பாடுகளின் கீழ் இந்த விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து விளையாட்டரங்கை திறந்துவைத்த ஜனாதிபதி அங்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியையும் பார்வையிட்டார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாண ஆளுனர் நிலுகா ஏகநாயக்க, முதலமைச்சர் சரத் ஏகநாயக, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, மாகாண அமைச்சர்களான எதிரிவீர வீரவர்த்தன, திலின பண்டார தென்னகோன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் ஸ்ரீலங்கா ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி தேரரின் கண்டி மெனிக்ஹின்ன ஸ்ரீ வித்யாசாகர மகா பிரிவெனாவுக்கு இன்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள் தேரரை சந்தித்து சுக துக்கங்களை விசாரித்தார்.

சங்கைக்குரிய தேரர் பேமசிறி நாயக தேரரின் 96வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தேரரின் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தித்தார். மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயகவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அவர்கள் பொல்கொல்லை நீர்த்தேக்கத்தையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வீதியால் நடந்துவந்த ஜனாதிபதி அவர்கள் மக்களுடனும் சுமுகமாக கலந்துரையாடினார்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்