Presidential Media Unit Default Banner

தும்பர பள்ளத்தாக்கினை வளமாக்கும் களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணி நிறைவு மற்றும் மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தினால் நீரில் முழ்கும் பழைய லக்கல நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய பசுமை நகரத்தை மக்களிடம் கையளிக்கும் விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நாளை (08) முற்பகல் இடம்பெறும்.

“மைத்ரி ஆட்சிபேண்தகு யுகம்” பொருளாதார மற்றும் கலாசார மறுமலர்ச்சியின் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதனை முன்னிட்டு இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவீன வசதிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய பசுமை நகரம், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ரஜரட்ட மக்களுக்காக கண்ட கனவினை நிறைவேற்றும் வகையில் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பல்நோக்கு செயற்திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் மற்றுமொரு பெறுபேறாகவே அம்மக்களுக்கு கிடைத்துள்ளது.

மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தினால் இடம்பெயர்ந்த 3000 குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் களுகங்கை நீர்த்தேக்கத்தினால் மூழ்கியுள்ள லக்கல நகரத்திற்குப் பதிலாக களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக புதிய லக்கல பசுமை நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எதிர்கால தேவைகளை கருத்திற்கொண்டும் புதிய நகரமயமாக்கல் எண்ணக்கருவான சுற்றுலா நகர கொள்கைக்கமைய இந்த நகரம் திட்டமிடப்பட்டுள்ளதோடு அதற்கான மொத்த முதலீடு 45,000 மில்லியன் ரூபாவாகும்.

லக்கல புதிய நகரத்தில் 26 அரச நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கான சேவைகளை வழங்கும் அந்நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இலகுவில் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டிருத்தல் விசேட அம்சமாகும். அதற்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய மருத்துவமனை மற்றும் லக்கல மகா வித்தியாலயம் ஆகியன நாளை ஜனாதிபதி அவர்களால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நீர்த்தேக்கம் களுகங்கை நீர்த்தேக்கமாகும். இது பராக்கிரம சமுத்திரத்தைப் போன்று இரண்டு மடங்கு விசாலமானதாகும். இந்த இரு நீர்த்தேக்கங்களையும் ஒன்றாக கருதும்போது அவற்றின் கொள்ளளவு பராக்கிரம சமுத்திரத்தைப் போன்று ஆறு மடங்கு விசாலமான பாரிய அபிவிருத்தி திட்டமாகும்.

களுகங்கை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு இரண்டு இலட்சம் ஏக்கர் அடிகளாகும். இந்நீர்த்தேக்கத்தின் பெருமளவு நீர் லக்கல புதிய நகரத்தின் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுதல் அதன் விசேட அம்சமாகும். அதனால் பழைய ஹத்தொட வாவி பிரதேசத்தின் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்வதற்கு களுகங்கையின் நீர் உபயோகப்படுத்தப்படும். அதேபோன்று குறிப்பிடத்தக்களவு நீர் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுவதனால் வனவிலங்குகளுக்கும் வேறு தேவைகளுக்கு நீரைப் பெற்றுக்கொள்வதற்கும் இதனூடாக வாய்ப்பு கிடைக்கின்றது. மிகுதியான நீர் சுரங்க கால்வாய் மற்றும் கால்வாய் மார்க்கமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த சுரங்கங் கால்வாய் 9 கிலோ மீற்றர் நீளமானதாகும்.

இந்த புதிய அபிவிருத்தி செயற்திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு நிகழ்வின் நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளைய தினம் மக்களிடம் கையளிக்கப்படுவதோடு, மக்களின் நலனுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கடந்த நான்காண்டு காலமாக முன்னெடுத்துவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் மற்றுமொரு அனுகூலமாகவே கிடைக்கப்பெற்றுள்ளது.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்