03

குறைந்த வருமானங்களை உடைய மக்கள் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் உட்படுதலே கிராமங்களில் வறுமை நிலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த சமூகப் பிரச்சினைக்கு தீர்வு காணும்பொருட்டு விசேட செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தல் அவசியம் என்பதுடன், சகல துறைகளின் பங்களிப்புடன் அரசாங்கம் தற்போது இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (23) முற்பகல் எம்பிலிபிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்ற “கிராமங்களை உருவாக்குவோம்” கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைதியான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கிராம மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் “போதைப்பொருட்களற்ற நாடு” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “கிராமங்களை உருவாக்குவோம்” கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் கீழ் இலங்கையின் சகல கிராமங்களிலும் சமூக பொலிஸ் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட போதைப்பொருள் தேடல்கள், புனர்வாழ்வு அளித்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் உற்பத்தியை இல்லாதொழிப்பதற்கான நிலையான முறையொன்றினை தயாரித்தல், கிராமத்தவர்களின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு  எச்சரிக்கை  விடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு வேறு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தலும் மேற்பார்வை செய்தலும், கிராமங்களிலுள்ள போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான வழிகாட்டல்களையும் உதவிகளையும் வழங்குதல், கிராமிய மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல், கிராமத்தின் இளம் சமுதாயத்தினரையும் பாடசாலை மாணவர்களையும் இலக்காக கொண்டு போதைப்பொருள் பாவனையினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் இச்செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சிறந்த சமூகத்தையும் அபிவிருத்தியடைந்த நாட்டினையும் ஆரோக்கியமான மக்களையும் கட்டியெழுப்புவதில் காணப்படும் சவாலான போதைப்பொருட்களை, இல்லாதொழிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கடந்த மூன்று வருட காலத்திற்குள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களினால் தேசிய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகள் கிடைத்து வருகின்றன.

விசேடமாக புகையிலை பாவனை கடந்த சில வருடங்களில் குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு குறைவடைந்துள்ளமை இந் நாட்டு மக்களின் சுகாதாரத் துறையில் பெற்றுக்கொண்ட மிகப்பெரும் வெற்றியாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டை நேசிக்கும் சகல மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்லலாம் என ஜனாதிபதி அவர்கள் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ஜோன் செனெவிரத்ன, தலதா அத்துகோரள, மஹிந்த அமரவீர ஆகியோரும் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் உள்ளிட்ட குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்