02

2015ஆம் ஆண்டு தமது அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன், காணிப் பரிமாற்றத்தினூடாக நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படமாட்டாது என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இதன்போது காணி உரிமையை இலங்கைக்கு தக்க வைத்துக்கொள்வதற்கு உறுதியளிக்கக்கூடிய பரஸ்பர, ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள இரு தரப்பினராலும் முடிந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் செங் சுவான் ஆகியோரின் முன்னிலையில் கொழும்பு துறைமுக நகரத்தின் காணி குத்தகை ஒப்பந்த பத்திரத்தை கையளிக்கும் நிகழ்வு இன்று (29) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

 

குறித்த காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிப்பதற்கான பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் அதிகார சபையினால் நில உரிமையை தம்வசம் தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான குத்தகை அடிப்படையில் காணி CHEC Port City Colombo தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.

 

துறைமுக நகர செயற்திட்டமானது இலங்கையில் நீண்டகால அபிவிருத்திக்கான பெறுமதிமிக்க ஒரு முதலீடாகும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் இதனால் பெருமளவு அந்நிய செலாவணி நாட்டுக்கு கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி மற்றும் சீன தூதுவரின் முன்னிலையில் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எஸ்.வி.ரத்நாயக்கவிடம் உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

 

இதனைத் தொடர்ந்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தினால் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் காணிக்கான ஆவணங்கள் CHEC Port City Colombo தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Jiang Houliang யிடம் கையளிக்கப்பட்டது.

 

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.டபிள்யு.கருணாரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

01

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்