Presidential Media Unit Default Banner

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் மாகாண சபைகளும் சுமுகமாக இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தினார்.

 

உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையிலும் மோதல் நிலைமைகள் ஏற்பட்டால் அதன்மூலம் பாதிக்கப்படுவது மக்களேயாவர் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்

 

இன்று (30) பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

எந்தவொரு அரசாங்கமும் அரசியல்வாதியும் அரசாங்க அதிகாரிகளும் நாட்டின் அரசியல் அமைப்புக்கேற்ப அமைக்கப்பட்டுள்ள நிறுவனக் கட்டமைப்பில் சுமுகமாகவும் இணைந்தும் பணியாற்ற வேண்டிய பொறுப்புள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார். தேசத்தின் பிள்ளைகளை கல்வித்துறையில் முன்னேற்றுகின்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அனைவரும் கூட்டாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார். கல்வித்துறைக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுப்பதைப்போன்று பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கப் பண்பாடான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான உரிய வழிகாட்டல்களையும் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

 

பொலன்னறுவை மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி, முன்னேற்றம், பிரச்சினைகள், சவால்கள் மற்றும் குறைபாடுகளை அறிந்துகொள்ளவும் நாளைய இளம் தலைமுறையினருக்கு தரம் வாய்ந்த கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

பிள்ளைகளின் கல்வி அறிவை மேம்படுத்தவும் ஒழுக்கப் பண்பாடான இளம் தலைமுறையை கட்டியெழுப்பவும் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக இதனை குறிப்பிட முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய சந்திப்பை ஏற்பாடு செய்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை முன்கொண்டு செல்லுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

 

பொலன்னறுவை மாவட்ட கல்வித்துறை முன்னேற்றம் குறித்து வலய கல்விப் பணிப்பாளர்களினால் அறிக்கைகள் முன் வைக்கப்பட்டதுடன், மாவட்ட பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

 

கல்வி அதிகாரிகள், கல்வி ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களினால் மாவட்டத்தின் கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் இங்கு முன் வைக்கப்பட்டன.

 

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வட மத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்