01

இந்த வருடம் இடம்பெற்ற சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில் விருது பெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதற்கும் அவர்களது எதிர்கால கலை நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கும் நிகழ்வும் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

பிரான்ஸ் நீஸ் விருதுகள் விழா, ஜப்பான் ஒசாக்கா ஆசிய திரைப்பட விழா, மொஸ்கோ நகரில் இடம்பெற்ற சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் விழா போன்ற விழாக்களில் விருது பெற்ற இலங்கை திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொலைக்காட்சி படைப்பாளிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், அதற்கமைய நீட்டா பெர்ணான்டோ, நில்மினி சிஹேரா, குமார கராவ்தெனிய, சிரான் ரத்னாயக்க, ரங்க பண்டாரநாயக்க, அத்துல பீரிஸ், நிஷாதி பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதி அவர்களின் பாராட்டை பெற்றனர்.

இதேவேளை பேராதனை பல்கலைக்கழகத்தின் 1965ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் 50வது ஆண்டு பூர்த்தி விழா மற்றும் எதிரிவீர சரத்சந்ர அவர்களின் உருவச் சிலையை திரைநீக்கம் செய்யும் விழாவிற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைபீட பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் டி.எஸ்.எதிரிசிங்க, ஆர்.எம்.கருணாரத்ன, சாந்தி வர்ணசூரிய, சாந்த கெக்குலாவல, ஜனித் த சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சர்வதேச ஜிம்னாஸ்டிக் சங்கத்தினால் நடாத்தப்படும் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொள்ள உள்ள பிரியந்தி சமரவீர, மில்ரோய் ஜயமான்ன மற்றும் பஸ்நாயக்க ஆகிய விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி அவர்கள் நிதியுதவியை வழங்கினார்.

2019 ஓகஸ்ட் மாதம் இங்கிலாந்து வோஸ்டரில் இடம்பெறவுள்ள 6வது சர்வதேச பொலிஸ் கிரிக்கட் களியாட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை பொலிஸ் கிரிக்கட் குழுவினருக்கும் ஜனாதிபதி அவர்கள் நிதி அன்பளிப்பை வழங்கினார்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்