4

ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் பற்றிய விழிப்புணர்வு கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இவ் விழிப்புணர்வானது ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு தற்போதைய சமூகத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி அவர்கள்  மேலும் தெரிவித்தார்.

சுங்க தினத்தின் இவ்வருட தொனிப்பொருளான ”பயனுள்ள தேச வரைறைகளின் முகாமைத்துவத்திற்கான தரவுப் பகுப்பாய்வு” என்பதை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சுங்க தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை சுங்க திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இன்று(26) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தையும், ஒழுக்கமான சமூகத்தையும் கட்டியெழுப்பும் பணிகளில் சுங்கத் திணைக்களத்தின் செயற்பணி பரந்துபட்ட எல்லைகளுக்குள் காணப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்புக்காக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பினை மெச்சிய ஜனாதிபதி அவர்கள், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளின்போது சுங்க திணைக்களம் மேற்கொள்ளும் பணிகளையும் பாராட்டினார்.

அவ்வாறே பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைவதற்கு சுங்கத் திணைக்களம் தனது பங்களிப்பினை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சர்வதேச சுங்க நிறுவனத்தின் தகைமை சான்றிதழ்களும் ஜனாதிபதி அவர்களினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் விசேட நினைவுச் சின்னமொன்றும் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சுங்க வரி பெயர்ப்பட்டியல் இருவட்டு, சுங்க கையேடு மற்றும் சுங்க சஞ்சிகை என்பனவும் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சுங்க பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா உள்ளிட்ட சுங்க திணைக்களத்தின் அலுவலர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

2 3 5 6 9 10

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்