01

சர்வதேச தொழில் தாபனத்திற்கு நூறு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூற்றாண்டு தின விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றது.

 

சர்வதேச தொழில் தாபனத்தின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் நான்கு கண்டங்களைச் சேர்ந்த 24 நாடுகளின் 24 தேசிய நிகழ்ச்சிகள் 24 மணி நேர நேரலை ஒலிபரப்பு நிகழ்ச்சித்திட்டமாக இடம்பெற்றது. மு.ப.10.30 மணியிலிருந்து 11.30 மணிவரை இலங்கை அந்நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்துகொண்டதுடன், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் விசேட வாழ்த்துச் செய்தியும் அதில் நேரலை செய்யப்பட்டது.

 

இலங்கையின் உழைக்கும் மக்கள், தொழில் தருநர்கள் சமூகம், தொழிற்துறையுடன் தொடர்புடைய சமூக பங்காளிகளுடன் கைகோர்த்து இடம்பெற்ற சர்வதேச தொழில் தாபனத்தின் நூற்றாண்டு தின விழாவிற்கு ஜனாதிபதி அவர்கள் அனுப்பி வைத்திருந்த வாழ்த்துச் செய்தியில், உழைக்கும் மக்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் சர்வதேச ரீதியாக போராடுகின்றவர்களுடன் இணைந்துள்ள சர்வதேச தொழில் தாபனம் கடந்த நூறு வருட காலப்பகுதியில் உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கு பல்வேறு விரிவான பணிகளையும் கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.

 

இதில் முதன்மையான பணியாக தொழில் அமைதியை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சிறுவர்கள் தொடர்பான பிரச்சினையில் சர்வதேச சமவாயத்திற்கேற்ப நடவடிக்கை மேற்கொண்டு இலங்கை முக்கிய வெற்றியை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இலங்கையின் தொழிலாளர் சமூகம் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்தர சமரவீரவினால் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

சர்வதேச தொழில் தாபனத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்களினால் அது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

மேலும் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ஜன்டீனாவில் இடம்பெற்ற சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை நிரந்தரமாக ஒழிப்பது பற்றிய 14ஆவது சர்வதேச மாநாட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சாசனத்திற்கு இலங்கையும் இணக்கம் தெரிவிப்பதற்கான அறிக்கையை இதன்போது ஜனாதிபதி அவர்கள் சர்வதேச தொழில் தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Simrin Singh அவர்களிடம் கையளித்தார்.

 

தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02

03

04

05

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்