Presidential Media Unit Default Banner

இலங்கையில் நடைபெறும் சர்வதேச பௌத்த மகா சம்மேளனத்தின் ஏழாவது பௌத்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று (02) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அழைப்பில் இவ்வருட மாநாடு இலங்கையில் நடைபெறுவதுடன், 47 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 300 பிரதான மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

”உலக சமாதானத்திற்கு பௌத்த சமயம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த பௌத்த மாநாடு இன்று முதல் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 02, 03 மற்றும் 04ஆம் திகதிகளில் அலரி மாளிகையின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதுடன், நவம்பர் 05ஆம் திகதி இடம்பெறும் நிறைவு விழாவும் கலாசார நிகழ்வும் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.

 

நவம்பர் 06 மற்றும் 07 ஆம் திகதி அளவில் வரலாற்று பிரசித்தி பெற்ற அநுராதபுர புண்ணிய பூமி மற்றும் கண்டி தலதா மாளிகையில் இடம்பெறும் வழிபாட்டில் ஈடுபட மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

ஜப்பான் சர்வதேச பௌத்த மகா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த மாநாட்டில், உலகில் அமைதியையும் விழுமியப்பண்புகளையும் மேம்படுத்துதல் மற்றும் உலகம் முழுவதும் பௌத்த சமயத்தை பரவச் செய்வதற்கான பிரகடனமும் வெளியிடப்படவுள்ளது.

 

ஆரம்ப விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், உலகில் தற்போது காணப்படும் பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள் என்பவற்றினைக் கட்டுப்படுத்தி அமைதியான உலகினை கட்டியெழுப்புவதற்கு சமயக் கோட்பாடுகளினால் வழங்கப்படும் வழிகாட்டல்கள் மிகவும் முக்கியமானவை எனத் தெரிவித்தார்.

 

பௌத்த மதத்தினால் போஷிக்கப்பட்ட மிகப் பழமையான வரலாற்றினை உடைய நாடாகிய இலங்கையில் இவ்வருட பௌத்த மாநாடு கோலாகலமான முறையில் இடம்பெறுகின்றமை தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளியிட்ட ஜனாதிபதி அவர்கள், இம்மாநாட்டின் மூலமாக உலக நாடுகளுக்கு வழங்கப்படும் செய்தியானது காலத்திற்கு உகந்ததாக அமைகின்றதென்றும் தெரிவித்தார்.

 

பௌத்த மாநாட்டின் தலைவர் வண. கம்பா லாமா கப்ஜூ தேரரினால் மாநாட்டின் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.

 

சர்வதேச பௌத்த மகா சம்மேளனத்தின் ஏழாவது பௌத்த மாநாட்டினை முன்னிட்டு நினைவு முத்திரையும் இதன்போது வெளியிடப்பட்டது.

 

மூன்று நிக்காயக்களைச் சேர்ந்த மகா சங்கத்தினரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்