Presidential Media Unit Default Banner

தேசத்தின் உயிர்நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்து அவர்களது உள, உடல் அபிவிருத்திக்கு சிறந்ததோர் சூழலைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படும் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பொலன்னறுவை மாவட்ட மாநாடு நாளை (10) முற்பகல் 10 மணிக்கு பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.

 

சமூகத்தில் தற்போது பரவியுள்ள பல்வேறு சீரழிவுகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்து துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசனை, ஆளுமைவிருத்தி கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளில் சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ நிகழ்ச்சித்தித்திட்டம் ஜனாதிபதி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டமாகும்.

 

இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த செப்டெம்பர் மாதம் கண்டி திகனயில் நடைபெற்றதுடன் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2017, 2019  தேசிய திட்டமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

 

நாளை நடைபெறும் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் ஜனாதிபதி அலுவலகம், மகளிர், சிறுவர் விவகார  அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்தி இந்நிகழ்ச்சித் திட்டங்கள் நடைபெறவுள்ளன.

 

குறித்த மாவட்டத்தில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஐந்து சிறுவர் இல்லங்களை நவீனமயப்படுத்தி புனர்நிர்மாணம் செய்தல், சிறுநீரக நோய் ஆபத்திலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு சுத்தமான குடிநீர் வசதிகள் இல்லாத 20 பாடசாலைகளுக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குதல், பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 381 பாடசாலைகளில் ஒரு பாடசாலைக்கு 50,000 ரூபாவீதம் நிதி வழங்குதல், சிறுவர்களை நல்ல சுகாதார பழக்கவழக்கங்களுக்கு பழக்கப்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், அங்கவீனமுற்ற பாடசாலை சிறுவர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், மூக்குக்கண்ணாடிகள் ஆகிய உபகரணங்களை வழங்குதல் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 45 முன்பள்ளி பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல், பாடசாலை மாணவர்கள் 1000 பேருக்கு புத்தகப் பைகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. உலவள ஆலோசனை, சட்ட ஆலோசனை  மற்றும் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காக நடமாடும் பஸ் வண்டியொன்றும் அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

 

ஒருவரது திறன் மற்றும் உளப்பாங்கு மாற்றத்தில் சிறுபராயத்தில் ஏற்படும் உள அழுத்தங்கள் அவர் மீது நேரடியாகத் தாக்கம் செலுத்துகின்றது என்பது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் சமூக, விஞ்ஞான ஆய்வுகளினூடாக தெரியவந்துள்ளது. சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியnழுப்புவதற்கு சிறுபராயத்தில் உளவிருத்தி படிப்படியாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன் இதன் மூலம் பண்பாடான நல்லதொரு பிரஜையை உருவாக்க முடியும்.

 

அந்த வகையில் இன்று தேவையாக இருப்பது சிறுவர்கள் முகங்கொடுத்திருக்கும் விரும்பத்தகாத  தாக்கங்களை கூடியவரை குறைப்பதாகும். ஆளுமை விருத்தி தொடர்பாக சமூகத்தின் அறிவு மட்டத்தை மேம்படுத்துவது இதற்கு அவசியமாகும். அந்தவகையில் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் ‘எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் சிறுவர்கள்’ என்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சிறுவர்களின் வாசிப்பு ஆர்வத்தை மேம்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு பல்வேறு விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்காக 250  மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்