01 (14)

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் (Chang Wanquan) இன்று (20) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தார்.

 

இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இருந்துவரும் நீண்டகால உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இலங்கையின் இறைமைக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சீனாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளைப் பாராட்டினார்.

 

நீண்டகாலமாக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் பயிற்சி சந்தர்ப்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், நாட்டில் யுத்தம் நடைபெற்ற தீர்க்கமான சந்தர்ப்பத்தில் சீனா வழங்கிய ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

 

இலங்கை நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு தேவையான பயிற்சிகளை தொடர்ந்தும் சீன அரசாங்கம் வழங்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இரு நாடுகளுக்கிடையே இருந்துவரும் நட்புறவு காரணமாக பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த அனைத்து உடன்படிக்கைகளையும் இலங்கையின் கீர்த்திக்கும் சுதந்திரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படாதவகையில் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வான்குவாங் தற்போதைய இலங்கை ஜனாதிபதி அவர்களின் கீழ் இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் மக்கள் நலன்பேணல் பலமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். இது சீன அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த சீன பாதுகாப்பு அமைச்சர், சீன ஜனாதிபதியின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குத் தெரிவித்தார்.

 

சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் கடந்துள்ள  நிலையில் இந்த உறவுகளை மேலும் பலப்படுத்துவது தனது நாட்டின் நோக்கமாகும் என்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்