2 (3)

நோயற்ற மக்களை உருவாக்கும் செயற்பணியில் மலேரியா, யானைக்கால் மற்றும் இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களற்ற நாடாக சர்வதேச ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் சுகாதாரத்துறையின் சகல சவால்களையும் வெற்றிகொள்ளும் எதிர்கால திட்டங்கள் அரசின் கைவசம் உள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

 

காலி கூட்டுறவு மருத்துவமனையின் புதிய இருதய அறுவை சிகிச்சைப் பிரிவினை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) பிற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

குடியேற்றவாசிகளினால் ஏற்படும் சுகாதார சிக்கல்கள் தொடர்பாகவும் அரசு அவதானத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நீண்டகாலமாகவே மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினையான மருந்துகளின் விலையை கட்டுப்படுத்துவதற்காக மருந்துகள் சட்டத்தினை பாராளுமன்றத்தில் அங்கீகரித்து மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை சுகாதாரத்துறையில் தற்போதைய அரசு பெற்றுக்கொண்ட வெற்றியாகும் எனவும் குறிப்பிட்டார்.

 

டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்கான அரசின் பொறுப்புக்களை உயர்ந்த அளவில் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

 

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய இருதய சத்திரசிகிச்சை பிரிவை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார். காலி கூட்டுறவு வைத்தியசாலையின் 55 வருட பூர்த்தியின் சமகாலத்தில் இந்த புதிய சத்திரசிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

வைத்தியசாலையில் 20 வருட சேவைக்காலத்தினை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நினைவுச் சின்னமும் ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

 

அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக, சந்திம வீரக்கொடி, தென் மாகாண ஆளுநர் ஹேமக்குமார நாணயக்கார, தென் மாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சர் யு.ஜி.டி.ஆரியதிலக உள்ளிட்ட தென் மாகாண கூட்டுறவு மருத்துவமனை சங்கத்தின் தலைவர் ஏ.டி.ஜி.சரத்சந்ர உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

1 (3) 3 (3) 4 (2) 6 (3) 7 (2) 8 (2) 11 (11) 12 (6)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்