04

உலக சுற்றுலா தினத்துடன் இணைந்ததாக இலங்கையில் இடம்பெறும் ‘சுற்றுலா தலைவர்கள் மாநாடு – 2017’ ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (04) முற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

 

சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய நிபுணர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் அரச கொள்கை வகுப்பாளர்களின் உதவியுடன் தேசிய உரையாடல் ஒன்றை உருவாக்கி அதனூடாக காலத்திற்கேற்ற தேசிய கொள்கையை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான  பங்களிப்பு இம்மாநாட்டின் நோக்கமாகும். சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஊடாக நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் தமது ஆய்வு அறிக்கைகள் மற்றும் முன்மொழிவுகளை முன் வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மூன்றாவது முறையாக நடைபெறும் இம்மாநாட்டை சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சும் கொழும்பு பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. ‘அபிவிருத்திக்கு பேண்தகு சுற்றுலாத்துறை – இலங்கையின் முன்னோக்கிய பயணம்’ என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை மாநாடு நடைபெறுகின்றது.

 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்கவினால் மாநாட்டின் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது. விசேட தபால் முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், சுற்றுலா கைத்தொழில்துறைக்கு சேவை செய்தவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

 

ஆதிவாசியான ஊருவரிகே வன்னிலா எத்தோ, சிரேஷ்ட சமயற்கலை நிபுணர் திமுத்து குமாரசிங்க ஆகியோருக்கு ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் வழங்கப்பட்டன.

 

சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அமைச்சின் செயலாளர் எசல வீரகோன் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

08 02 03 04 05 06 07 09 10 11 12

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்