5

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி காரணமாக பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

 

இந்த பிரச்சினையில் ஜனாதிபதி என்ற வகையில் தான் எந்தவொரு தரப்புக்கும் சார்பாக இருக்கப்போவதில்லை என்றும் இவ்விடயத்தில் பக்கச்சார்பின்றி, நடுநிலையாக செயற்பட்டு நியாயத்தை நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இவ்விடயத்தில் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான திட்டமொன்றைத் முன்வைத்து பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, வகுப்பு புறக்கணிப்புக்களில் ஈடுபடாமல் கல்விச் செயற்பாடுகளை தொடருமாறு அனைத்து மருத்துவ பீட மாணவர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நுவரெலியாவில் 150 வீடுகளைக் கொண்ட ‘ஹூட்வில்புரம்’ கிராமத்தை இன்று (09) முற்பகல் மக்களுக்கு வழங்கியபின் தலவாக்கலை நகர சபை விளையாட்டரங்கில் மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள பிள்ளைகளை ஒவ்வொருவரின் தேவைக்காக பயன்படுத்த இடமளிக்க முடியாதென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நியாயமான சமூகமொன்றில் போட்டி உலகை வெற்றிகொள்வதற்கான பாதைகளை மாணவர்களுக்கு திறந்து விடும் அரசாங்கத்தின் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவையான வசதிகளை குறைவின்றி வழங்கி இலவச கல்வியைப் பலப்படுத்தி அதன் தரத்தையும், தராதரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாமல் போனாலும், அதற்கான தகைமையுள்ள மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தரம் மற்றும் தராதரம் மிக்க கல்வி நிறுவனங்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

 

லயன் வீடுகளுக்கு பதிலாக புதிய கிராமங்களை தோட்டப்பகுதிகளில் உருவாக்கும் திட்டத்தின் ‘எமக்குரிய காணியில் எமக்குரிய வீடு மலையகத்துக்கு புதிய கிராமம்’ எண்ணக்கருவிற்கமைய இக் கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டு அறைகள், சாலை, சமையலறை, குளியலறை கொண்டதாக 550 சதுர அடி வீடு 07 பேர்ச் காணியில் அமைக்கப்பட்டுள்ளது.

 

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்ட மக்களின் கண்ணீருக்கு காரணமான பிரச்சினைகளை தீர்த்து அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தி அவர்களது நலன்களுக்காக ஆற்றக்கூடிய அனைத்தையும் செய்வதாக தெரிவித்தார்.

 

நாட்டைக் கட்டியெழுப்பும் போது வடக்கு, கிழக்கு, மலையகம் எனும் பிரச்சினை இல்லையென்பதுடன் அனைத்து மக்களும் தமது உரிமைகளை மற்றும் சலுகைகளுடன் வாழவேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறினார்.

 

நிகழ்வுக்காக வருகைதந்த ஜனாதிபதி அவர்களை பாரம்பரிய முறைகளுடன் வரவேற்ற மக்கள், தேசிய கொடிகளுடன் இருபுறமும் நின்று கௌரவமளித்தனர்.

 

கிராமத்தை மக்களுக்கு உரித்தளிப்பதனை குறிக்குமுகமாக நினைவு முத்திரையும் முதல்நாள் தபாலுறையும் வெளியிடப்பட்டது. மக்களுக்கான காணி உறுதிகள், பாடசாலைப் பிள்ளைகளுக்கான பால் வழங்குவதற்கான நிதி வழங்குதல், இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் கடன் வழங்குதல், சமூர்த்தி உதவி வழங்குதல், 2016 உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்ற அக்கரப்பத்தனை ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செபமாலை செலெஸ்ரினா மேரி எனும் மாணவிக்கு மடிக்கணனி வழங்கியமை ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.

 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க, அமைச்சர்களான பீ. திகாம்பரம், மனோ கணேசன், எம்.எச்.எம்.ஹலீம், பைசர் முஸ்தபா, அர்ஜூண ரணதுங்க, ராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
6

7

8

9

10

13

14

1

2

3

5

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்