இலங்கைக் குடியரசு நாட்டின் தலைவராக ஜனாதிபதி காணப்படுகிறார். மேலதிகமாக, நிறைவேற்றதிகாரத்தின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும், இராணுவப் படைகளின் பிரதான படைத்தளபதியாகவும் ஜனாதிபதி காணப்படுகிறார்.

ஜனாதிபதி ஆனவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், ஆறு வருட காலப்பகுதிக்கு பதவி வகிப்பார். எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தில் பங்குபெறும், உரையாற்றும், செய்திகளை அனுப்பும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு. வாக்களிக்கும் உரிமை தவிர்த்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்துச் சிறப்புரிமைகளையும், சட்ட விலக்களிப்புக்களையும், அதிகாரங்களையும் ஜனாதிபதி கொண்டிருக்கிறார் என்பதோடு, பாராளுமன்றத்தினதோ அல்லது உறுப்பினர்களதோ சிறப்புரிமைகள் மீறப்படுவதற்கு உரித்துடையவர் அல்லர்.

அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதி காணப்படுவதோடு, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதோடு, பாராளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களிடையே பிரதமரைத் தெரிவு செய்வார்.

பொருத்தமான சட்டங்களுக்கு ஏற்றவாறு பாராளுமன்றத்தைக் கூட்டுதல், ஒத்திவைத்தல், கலைத்தல்,கருத்துக்கணிப்பைக் கோருதல் ஆகியன ஜனாதிபதியின் அதிகாரங்களுக்குள் உள்ளடங்குகின்றன.

தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவருக்கு கீழ்வரும் அதிகாரங்களையும் அரசியலமைப்பு வழங்குகிறது:

  • ஓவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பத்தின்போதும் அரசாங்கக் கொள்கை அறிவிப்பினை பாராளுமன்றத்தில் வெளியிடல்.
  • பாராளுமன்றத்தின் சம்பிரதாயபூர்வ அமர்வுகளுக்குத் தலைமை தாங்குதல்.
  • வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பூரண அதிகாரம் பெற்ற அரசுப் பிரதிநிதிகள், ஏனைய இராஜதந்திரத் தூதுவர்கள் ஆகியோரை ஏற்றுக் கொள்தலும், அங்கீகரித்தலும், அதேபோல் நியமித்தலும்.
  • இலங்கைக் குடியரசின் பொது இலச்சினையைக் காப்பில் வைத்திருப்பதுடன், பிரதமரினதும்,அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களினதும், பிரதம நீதியரசரினதும், உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகளதும் நியமனப்பத்திரங்கள், குடியரசிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளனவும், வழங்கும்படியும், கையளிக்கும்படியும்,சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டுள்ள அல்லது தத்துவமளிக்கப்பட்டுள்ளவுமான காணி வழங்கல்கள், காணிக் கையளிப்புக்கள். அசைவற்ற ஆதன வழங்கல்கள், அசைவற்ற ஆதனக் கையளிப்புக்கள் ஆகியவற்றைப் பொது இலச்சினையின் கீழ் செய்வதற்கும், நிறைவேற்றுவதற்கும், அந்த இலச்சினை பொறிக்கப்பட வேண்டிய இச்சினையிடுவதற்கு அப்பொது இலச்சினையைப் பயன்படுத்துதல்.
  • போர், சமாதானம் ஆகியவற்றைப் பிரகடனஞ் செய்தல்.
  • அவராற் செய்யப்பட வேண்டுமென நாட்டிடைச் சட்டத்தினால், வழக்காறினால், அல்லது வழமையினால் தேவைப்படுத்தப்படுவனவும், அல்லது அதிகாரமளிக்கப்படுவனவும், அரசியலமைப்பின் அல்லது எழுத்திலான சட்டத்தில் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாய் இராதனவும் ஆன அத்தகைய எல்லாச் செயல்களையும்,காரியங்களையும் செய்தல்.
  • பொது மன்னிப்பை வழங்குதல், தண்டனைகளை நிறைவேற்றுதலில் காலந்தாழ்த்தலை வழங்குதலையும்,வழங்கப்பட்ட தண்டனைக்குப் பதிலாக தீவிரம் குறைவான தண்டனைனை வழங்குதல், விதிக்கப்பட்ட தண்டனையின் முழுவதையோ அல்லது பகுதியொன்றையோ தளர்த்துதல்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட விலக்களிப்புகளின் கீழ் பதவியில் காணப்படும் வரை ஜனாதிபதிக்கெதிராக உத்தியோகபூர்வ ரீதியிலான அல்லது தனிப்பட்ட ரீதியிலான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படவோ அல்லது தொடரவோ முடியாது. நோயின் காரணமாகவோ அல்லது நாட்டில் காணப்படாத நிலையிலோ ஜனாதிபதியால் தனது கடமைகளை ஆற்ற முடியாதிருப்பின் அதிகாரங்களை தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதக்கும் பிரதமர் நியமிக்கப்படுவார், அத்தோடு அத்தகைய காலத்தின் போது பிரதமர் பதவியில் பதிற்கடமை ஆற்றுவதற்கு ஏனைய அமைச்சர்களில் ஒருவர் நியமிக்கப்படலாம். முழு நாடுமே ஒரு தேர்தல் தொகுதியாகக் கருதப்படும் வகையில் தேர்தல் செயலாளர் நாயகம் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதுவார். வெற்றியாளர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டிய தேவையுள்ளதுடன், ஜனாதிபதியாக பிரதம நீதியரசரின் முன்னால் சத்தியப்பிரமாணம் மேற்கொள்வார்.