Default Banner

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது ஆலோசனைக்கமைய  ஜா-எல, தண்டுகம பகுதியின் இரு இடங்களில் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவந்த காணி நிரப்பல் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த காணி நிரப்பல் தொடர்பில் பிரதேச மக்களால் நேற்று (03) ஜனாதிபதி அவர்களிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, குறித்த இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொள்ளுமாறு  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்கு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

அதற்கமைய மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலர்கள் மற்றும் காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபன அலுவலர்கள் ஜா-எல பொலீசாருடன் இன்று அந்த இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்ததுடன், ஜனாதிபதி அவர்களது ஆலோசனைக்கமைய அந்த அத்துமீறிய காணி நிரப்பல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முத்துராஜவல கண்டல் தாவர சுற்றாடல் கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தி பெருமளவான நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டவிரோத தாழ்நில நிரப்பலை மேற்கொண்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சுற்றாடல் மற்றும் உயிர்ப் பன்மைத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடியவாறு மேற்கொள்ளப்படும் இவ்வாறான அனுமதியற்ற காணிநிரப்பல் நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களுக்கமைய உயர்ந்த பட்ச தண்டனை வழங்குமாறு இதற்கு முன்னரும் ஜனாதிபதி அவர்களினால்; ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்