09

நாட்டின் சுயாதீனத்திற்கு சவாலாக அமையும் எந்தவொரு வெளிநாட்டு ஒப்பந்தத்திலும் தனது ஆட்சிக் காலத்தினுள் கைச்சாத்திடப்போவதில்லை என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

நாட்டைக் காட்டிக்கொடுக்கும் சொபா மிலேனியம், செலேஞ் உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் மற்றும் நாட்டுக்குப் பொருந்தாத காணிச் சட்டங்கள் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அக்கருத்துக்களின் தன்மை எவ்வாறாக அமைந்தாலும் நாட்டுக்கு பங்கம் ஏற்படுத்தும் அதேபோன்று நாட்டுக்கு பொருந்தாத எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் தான் உடன்படப் போவதில்லையென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இன்று (06) முற்பகல் பிபிலை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தேசத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தலை இல்லாதொழிப்பதற்கு தான் தலைமைதாங்கும் இச்சந்தர்ப்பத்தில், சில அதிகாரமிக்க அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை காப்பாற்றுவதற்கு முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அத்தகைய செயற்பாடுகளின் பிரதிபலன்களை அப்பாவி குழந்தைகளே அனுபவிக்க நேரிடும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருள் கட்டத்தல்காரர்களுக்கு எதிராக தன்னால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லும் அனைவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் அவர்களால் வழங்கப்படும் பணத்திற்காகவும் செயற்படும் நபர்களாவர் எனத் தெரிவித்தார்.

 

போதைப்பொருள் கடத்தல் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாதென்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல் விஸ்வரூபம் எடுப்பதற்கான ஒரே காரணம் இதுவரை ஆட்சியமைத்த எந்தவொரு அரசாங்கமும் அரசியல் தேவைகளின் பொருட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல் படுத்தாமையேயாகுமெனத் தெரிவித்தார். இன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தான் முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகளின் காரணத்தினால் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் தெளிவான பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் பொதுவான கொள்கைகளுக்கு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் ஒன்றுபட வேண்டுமென்றும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிளவுபடுவதனூடாக ஒட்டுமொத்த நாடும் நாசமடைந்துவிடும் எனவும் தெரிவித்தார்.

 

பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்கள் இதுவரை முகங்கொடுத்துவந்த தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” செயற்திட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சித் தொடர் கடந்த முதலாம் திகதி முதல் மொனராகலை மாவட்டத்தை மையமாகக்கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 319 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சித்திட்டத்தினூடாக 479,000 பயனாளிகள் நன்மைகளைப் பெற்றுக்கொள்வர். இன்றைய இறுதி நாள் நிகழ்வில் மாவட்ட மக்களுக்கு பல்வேறு நன்மைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், மாவட்டத்தின் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிகிச்சைகளுக்காக 36 மில்லியன் ரூபா செலவில் வெள்ளவாய தள வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய்ப் பிரிவு ஜனாதிபதி அவர்களினால் தொலை தொடர்பு தொழிநுட்பத்தினூடாக திறந்துவைக்கப்பட்டது.

 

சுற்றாடல் பொறுப்புகள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இசுற தேவப்பிரியவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, ரஞ்சித் மத்தும பண்டார, தயா கமகே, ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, ரவீந்திர சமரசிங்க, மஹிந்த அமரவீர, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர், மொனராகலை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர், முப்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

04

05

06

07

08

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்