Maithripala Sirisena - 01

தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மாவட்ட மக்களுக்கு அநீதி இழைக்காது தமக்கு ஒதுக்கப்படும் நிதியினைக்கொண்டு மாவட்டத்திற்கு தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இன்று (27) பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

 

பிரதேச அரசியல் தலைவர்கள், வெளிக்கள அதிகாரிகளுடன் இணைந்து கிராமிய மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், தனது பிரதேசத்தில் வறுமை நிலையிலுள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து, மாதிரி கிராமங்களாக அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.

 

அத்துடன் மக்களுக்கு நிவாரணமளிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சி பேதங்களை கருத்திற்கொள்ளக்கூடாதெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போாது வலியுறுத்தினார்.

 

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.

 

நிறைவு செய்யப்படும் நிலையிலுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்களின் அநுகூலங்களை விரைவில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

குடிநீர் பிரச்சினை, விவசாயத்துறை சார்ந்த பிரச்சினைகள், சுகாதார வசதிகள், வீதி நிர்மாணம், பாடசாலைகள் மற்றும் விகாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பொலன்னறுவை நகர திட்டத்தின் கீழான அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

பொலன்னறுவை நகர வீதி அபிவிருத்தியினால் வீடுகளை இழந்த 150 பேருக்கான நட்டஈட்டினை ஜனாதிபதி அவர்கள் இன்று வழங்கினார்.

 

வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.

 

இதனிடையே அளுத்வெவ இளைஞர் கழகத்தின் பல்நோக்கு கட்டிடத்தொகுதியையும் இன்று பிற்பகல் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

 

தபால் அலுவலகம், கலாசார மண்டபம், கேட்போர்கூடம் உள்ளிட்ட பல வசதிகள் இந்த கட்டிடத்தொகுதியில் காணப்படுகின்றன.

 

வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க, இளைஞர் கழகத்தின் தலைவர் புத்திக ஏக்கநாயக்க மற்றும் பிரதேச இளைஞர், யுவதிகள் பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்