09

தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சுற்றாடல் பாதுகாப்பின் பெறுமதியை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் இனங் கண்டுள்ளதாக இன்று (12) முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை தெரிவித்தார்.

 

கௌரவ ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பல்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் மாவட்ட மட்டம் வரையில் மக்களுக்கு அதிகளவிலான சேவையையும் நன்மைகளையும் பெற்றுக்கொடுப்பதே “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். அரச நிறுவனங்களினால் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து, அரச பொறிமுறையின் மூலம் உயர்ந்த வினைத்திறனுடன் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

 

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டம் கடந்த 08ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமானதுடன், மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு பெரும் மக்கள் ஆதரவு கிடைக்கப் பெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

இன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிறைவு வைபவத்திலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, மாவட்ட மக்களுக்கு 5000 தென்னங் கன்றுகளும், 5000 மர முந்திரிகை கன்றுகள் பகிர்ந்தளித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கான கடனுதவி, இராணுவ வீரர்களுக்கான வீட்டுக் கடனுதவி, பேண்தகு பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டத்தின் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளித்தல், விவசாய ஓய்வூதிய திட்டத்தை வழங்குதல், வணக்க ஸ்தலங்களுக்கான நிதியுதவி, மருத்துவமனை அபிவிருத்திக்கான உபகரணங்களை வழங்குதல், குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் உள்ள இரு பிள்ளைகளை அவர்களது குடும்பங்களுடன் மீளிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் இதன்போது இடம்பெற்றன.

 

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சட்ட விரோத போதைப்பொருட்கள் கிழக்கு மாகாணத்தின் ஊடாகவே அதிகளவு நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக இனங் காணப்பட்டுள்ளதோடு, தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துவதோடு அதனை தடுப்பதற்கு பிரதேச மக்களின் ஒத்துழைப்பினையும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலில் தற்போது அந்த மாகாணங்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் மிகுந்த வினைத்திறனோடு முன்னெடுக்கப்பட்டு வருதல் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர்கள் வியாழேந்திரன், ஜி.சிறிநேசன், எஸ்.யோகேஸ்வரன் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

இதனிடையே இளைஞர்களின் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டும் “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் வழிகாட்டல் மத்திய நிலையம் இன்று ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து தொழில் வழிகாட்டி நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டர். ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் எரிக் வீரவர்தன உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

04

05

06

07

08

11

12

13

14

15

16

17

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்