09 (19)

இலங்கையின் விவசாய செயற்பாடான தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (08) முற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ஜய ஶ்ரீ மகாபோதி வளாகத்தில் நடைபெற்றது.

வருடாந்தம் பெரும்போகத்தில் அறுவடை செய்யப்படும் புத்தரிசியை கொண்டு ஜய ஶ்ரீ மகாபோதிக்கு வழிபாடு செய்யும் பாரம்பரியமான நிகழ்வு வண. பல்லேகம சிறிநிவாச நாயக்க தேரரின் ஆசீர்சாதத்துடன் விவசாய அமைச்சினதும், கமநல சேவைகள் திணைக்களத்தினதும் ஒருங்கிணைப்பில் 50 ஆவது தடவையாக இவ்வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மன்னர் காலத்திலிருந்தே நடைபெற்றுவரும் இந்த பாரம்பரிய நடைமுறையின்போது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து பருவத்திற்கு மழை பொழிய வேண்டும், வயல் நிலங்கள் செழிப்புற வேண்டுமென பிரார்த்தனை செய்வதுடன், விவசாயத்தினால் நாடு தன்னிறைவடைந்து சுபீட்சமான பொருளாதாரம் ஏற்பட வேண்டும் என்றும் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை நடைபெற வேண்டுமெனவும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

புத்தரிசி விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் முதலில் ஜய ஶ்ரீ மகா போதியில் வழிபாடுகளை மேற்கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் நச்சுத்தன்மையற்ற முறையில் உற்பத்தி செய்யப்பட்ட தேசிய அரிசியைக் கொண்டு ஜனாதிபதி அவர்களின் திருக்கரங்களினால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

சகல மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் அந்தந்த பிரதேசங்களுக்குரிய விதை நெல் வகைகள் ஜனாதிபதி அவர்களால் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் ஒரு விவசாயியை ஜனாதிபதி பதவிக்கு நியமித்த இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு மிக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அதற்கான பலன்களை நாட்டின் விவசாய பெருமக்கள் எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் விவசாயத் துறையைக் கட்டியெழுப்புவதற்கும், விவசாயிகளின் பொருளாதாரத்தை பலப்படுத்தவும் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் வேறு எந்த அரசாங்கத்தினாலும் நிறைவேற்றப்பட முடியாத செயற்பணிகளாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சியானது முன்னொருபோதும் செயற்படுத்தப்படாத விடயமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்காக தற்போது அரசாங்கத்தினால் 7000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்.

ரஜரட்ட மக்களின் கண்ணீர் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து மொரகஹகந்த நீர்த்தேக்கத்திட்டத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் துரிதமாக ஆரம்பித்து வைத்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள் அந்த விவசாயிகளின் விவசாய செயற்பாடுகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு மேலும் ஆயிரம் குளங்களின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது அரசினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் புத்தரிசி விழா பற்றிய நினைவு மலர் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

வடமத்திய பிரதேசத்தின் பிரதான நாயக்க தேரர் வண. பல்லேகம சிறிநிவாச தேரர், ருவன்வெலிசாய விகாராதிபதி வண. பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஷ், சந்ராணி பண்டார, திஸ்ஸ கரலியந்த, வட மத்திய மாகாண ஆளுநர் பி.பீ. திசாநாயக்க உள்ளிட்டோரும், அரசியல் பிரதிநிதிகளும், விவசாய அமைச்சின் செயலாளர் டீ. விஜயரத்ன, கமநல சேவைகள் அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் டீ.வீ. பந்துசேன உள்ளிட்ட அரச அதிகாரிகளும்இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

இதன் பின்னர் ஜேதவனாராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டதுடன், விகாராதிபதி வண. இஹல ஹல்மில்லேவே ரத்னபால நாயக்கதேரரையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஜேதவனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாயிலும் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

01 (56)

02 (43)

03 (37)

04 (30)

05 (28)

06 (24)

07 (24)

08 (22)

10 (19)

11 (22)

12 (14)

13 (15)

14 (9)

16 (7)

17 (3)

18 (3)

19 (4)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்