Maithripala Sirisena - 01

போதையிலிருந்து விடுபட்ட நாட்டை உருவாக்கும் நோக்கில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் நான்காவது நாளான இன்று (27) பாதுகாப்பு துறையினரின் பங்களிப்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு கால அட்டவணையை பிரகடனம் செய்யும் கிழக்கு மாகாண வேலைத்திட்டம் இன்று முற்பகல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வா தலைமையில் இடம்பெற்றது.

 

போதைப்பொருள் பாவனையினால் குடும்ப கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், போதைப்பொருள் மற்றும் புகையிலை பாவனையிலிருந்து மக்களை மீட்பதற்கு மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் தொடர்பாக பொலிசாரும் விசேட வைத்திய நிபுணர்களும் இதன்போது தெளிவுபடுத்தினர்.

 

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

போதையின் பிடியிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக வரலாற்றில் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத நடவடிக்கைகளை தேசிய மட்டத்தில் ஜனாதிபதி அவர்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது பாராட்டு தெரிவித்தார்.

 

“நான் போதையிலிருந்து விடுபட்டவன்”, “சிறந்த நன்னடத்தை”, இலச்சினைகள் மற்றும் பாராட்டு கடிதம் வழங்குதல், முப்படையினரால் மக்களை தெளிவுபடுத்தும் செயற்திட்டங்கள் இன்று நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

 

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் பற்றிய விசேட விரிவுரை நாராஹென்பிட்டியவிலுள்ள இலங்கை இராணுவ வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் அபாயகரமான ஔடதங்கள், கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பேராசிரியர் சமன் அபேசிங்க தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

 

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் ஐந்தாவது தினமான நாளை போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் பல விசேட செயற்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்