21

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்றவகையில் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டை விவசாயத்துறையில் சுபீட்சமடையச் செய்வதற்கு தனது பதவிக்காலத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 

பாரிய குளங்களை நிரப்பி விவசாய சமூகத்தினர் நீர் பிரச்சினைக்கு முகங்கொடுக்காதவகையில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

வடமேல் மாகாண மக்கள் நீண்டகாலமாக நீருக்காக கண்ணீர்வடித்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில் வடமேல் மாகாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொடுக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டமாக வடமேல் வாய்க்கால் (வயம்ப எல) திட்டத்தை இன்று  (13) முற்பகல் ஆரம்பித்துவைத்த பின் கலேவெல வெலமிட்டியாவ வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

அரசியல் கட்சி வேறுபாடுகளின்றி நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுவது அனைவரினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பட்ட ஜனாதிபதி, அரசாங்கத்தை அமைப்பதற்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கும் தேர்தலின்போது முடியும் என்றும் இன்று செய்ய வேண்டியது பேதங்களை மறந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றுபடுவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

 

அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் நேர்மையாக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவார்களாயின் நாடு இன்று முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வது கடினமானதல்ல எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் அபிவிருத்தி இலக்கை நோக்கி தொடர்ந்தும் பயணிப்பதாகும் என்றும் எத்தகைய சவால்கள் ஏற்பட்டபோதிலும் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

மீஓய மற்றும் ஹக்வட்டுனா ஓய நீர்த்தேக்கங்களுக்கு மகாவெலி நீரை திசை திருப்பி குருநாகல் மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திலுள்ள பல குளங்களை வளப்படுத்தி விவசாயத்துறையை மேம்படுத்துவதையும் நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதையும் நோக்காகக் கொண்டு வடமேல் கால்வாய் திட்டம் மகாவெலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

இத்திட்டத்தின் கீழ் சுமார் 1,05,000 ஏக்கருக்கு மகாவலி நீரை வருடாந்தம் குருநாகலை மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திற்குப் பெற்றுக்கொள்ள முடியும். இப்பிரதேசத்திலுள்ள 300 சிறிய குளங்கள் மற்றும் 08 பிரதான குளங்கள் மகாவலி நீரைப்பெற்றுக்கொள்வதுடன் ஹக்வட்டுனாஓய நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் 2500 ஹெக்டெயார் விவசாயக்காணிகள் மற்றும் மீஓய நீர்த்தேக்கத்திட்டத்தின் கீழ் 3500 ஹெக்டெயார் விவசாயக்காணிகள் உட்பட 12000 க்கும் மேற்பட்ட விவசாயக்காணிகளில் இரண்டு போகங்களிலும் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்தை வழங்கக்கூடியதாக இருக்கும்.

 

இப்பிரதேசத்தில் சிறுநீரக நோய்க்கு காரணமாகவுள்ள குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக இத்திட்டம் அமைவதுடன், நிர்மாணப்பணிகளில் நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இத்திட்டத்திற்கு சுமார் 16 ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படவுள்ளது.

 

வேமெடில்ல இடது புற கால்வாய் நிலத்தில் மண்ணை வெட்டி இந்த நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார். இத்திட்டத்தின் காரணமாக காணிகளை இழந்தவர்களை மீள்குடியேற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் காணி உறுதிகளும் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.

 

அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, அநுரபிரியதர்சன யாப்பா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர்களான லக்ஷ்மன் வசந்த பெரேரா, தாரானத் பஸ்நாயக்க, வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

1

2

3

4

5

6

7

9

10

12

13

14

15

16

18

19

20

21

22

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்