01
நாட்டின் சனாதிபதி என்ற வகையில் தனக்கு கட்சி, நிறம் ஆகிய வேற்றுமை இல்லை எனத் தெரிவித்த சனாதிபதி அவர்கள், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுகின்ற அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கு கட்சி வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் உரிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.
காலி, நெலுவ தேசிய பாடசாலையின் புதிய கேட்போர் கூடத்தை இன்று (19) முற்பகல் மாணவர்களின் பாவனைக்கு ஒப்படைத்ததன் பின்னர் நடைபெற்ற வைபவத்தில் உரை நிகழ்த்தும்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காலி, நெலுவ போன்ற மிகப் பின் தங்கிய பிரதேசம் இன்று தெளிவான அபிவிருத்தியை அடைந்திருப்பதற்கு காரணம் மக்கள் பிரதிநிதிகள் கட்சி, நிறம் ஆகிய வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் ஒன்றாக செயல்படுவதுதான் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற வகையில் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இன்று முற்பகல் நெலுவ தேசிய பாடசாலைக்குச் சென்ற சனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை அதன் மாணவர்கள் கோலாகலமாக வரவேற்று பாடசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய மூன்று மாடிக் கட்டிடத்தையும் தொழில்நுட்பபீடத்தையும் மாணவர்களின் பாவனைக்கு ஒப்படைத்த ஜனாதிபதி அவர்கள் தொழில்நுட்ப பீடத்தை பார்வையிட்டு மாணவர்களோடு அளவளாவினார்.
அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போது புதிய கல்வித்திட்டத்தின் மூலம் இந்நாட்டில் இலவசக் கல்வியில் புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு புதிய அரசு என்ற வகையில் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார்.
தொழில் கேட்டு ஊர்வலம் போகின்ற பட்டதாரிகள் இன்று நமது நாட்டில் தோன்றியிருப்பதற்கு காரணம் எமது கல்வி முறையில் இருக்கின்ற குறைபாடுகள்தான் என்பதை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் தொழில்நுட்ப உலகத்திற்கும் வேகமாக அபிவிருத்தி அடைகின்ற சமூகத்திற்கும் தேவையான அறிவு, புரிந்துணர்வு, அனுபவம் என்பவற்றுடன் எமது கல்வியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசு என்ற வகையில் துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இன்றைக்கு 108 ஆண்டுகளுக்கு முன்னர் 1907ஆம் ஆண்டு மகாபோதி கலவன் பாடசாலையாக 6 மாணவர்களைக்கொண்டு ஆரம்பமான நெலுவ தேசிய பாடசாலை 1999ஆம் ஆண்டு தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது அத்துடன் தற்பொழுது மாகாணத்தின் பிள்ளைகளின் அறிவையும் பண்பையும் மெருகூட்டுவதற்கு விரிவாக சேவையாற்றுகின்ற தனித்துவமான ஒரு பாடசாலையாக இருக்கின்றது.
வித்தியாலயம் பெற்றுள்ள முன்னேற்றத்தை இதன்போது பாராட்டிய சனாதிபதி அவர்கள் எஞ்சியிருக்கும் குறைபாடுகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
அமைச்சர் பியசேன கமகே, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் த சில்வா ஆகியோருடன் மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலை அதிபர் திரு.டீ.கே.பிரேமதாச உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள். பழைய மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

15 14 13 10 08 04 02

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்