01

அன்று தேசிய சுதந்திரப் போராட்டத்தில் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் செயற்பட்டு தமது யூகப்பணியை நிறைவேற்றியது போன்று இப்போதும் நாட்டை அபிவிருத்தி அடையச்செய்து, நாட்டை கட்டியெழுப்பும் காலத்தின் தேவையை நிறைவேற்றுவதற்கு அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவிக்கிறார்.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற முஸ்லிம் சமய விவகார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துக்குரிய புதிய பண்பாட்டு மையத்தை திறந்து வைக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களனைவரும் ஒன்றிணைந்தே இன்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர் என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மீண்டும் போர் ஏற்படுவதனைத் தவிர்த்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவது தனது தலைமையிலான தற்போதய அரசாங்கத்தின் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

எதிர் சக்திகள் இது தொடர்பில் தொடர்ச்சியாக தவறான அர்த்தங்களை வெளிப்படுத்தி இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த பிற்போக்குவாத சக்திகளுக்கு இடமளிக்காமல், நாட்டில் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கு அனைத்து மத தலைவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.

 

கொழும்பு டீ.பீ.ஜாயா மாவத்தையில் இந்த பண்பாட்டு மையம் அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து பண்பாட்டு மையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அந்த மையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

 

தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

 

பௌத்த மதகுருமார் உள்ளிட்ட மதகுருமார்கள், அமைச்சர்களான றிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், தபால்,  தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் டீ.பீ.எம்.வீ.ஹப்புஆராச்சி உள்ளிட்ட அலுவலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

08

02

05

06

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்