Presidential Media Unit Default Banner

ஆட்சியிலிருந்து மக்களால் இறக்கப்பட்டோர் மீண்டும் அதிகாரத்துக்கு வர கனவு கண்டுகொண்டு பல்வேறு சதிகளை மேற்கொண்டாலும் எவராலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. அரசியலமைப்பு மற்றும் சட்டத்துக்கமைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. நீண்டகால அரசியல் அனுபவத்துடன் நாட்டு நலனுக்கான மேற்கொள்ளும் பயணத்தை எவராலும் நிறுத்த முடியாதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இன்று (26) பிற்பகல் இப்பாகமுவ, கும்பல் அங்க ஹமீதியா முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்றல் வள நிலைய திறப்பு விழாவில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நாட்டு மக்கள் கடும் சிரமத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் வேலைநிறுத்தத்தை நிறுத்தி உடனடியாக பணிக்கு திரும்புமாறு தாம் அவர்களிடம் கோருவதாகவும் தெரிவித்தார். மருத்துவர்களும் இன்று வேலை நிறுத்தத்தை விளையாட்டாக மாற்றியுள்ளதுடன், அதனால் மனித உயிர்களுக்கு எந்தவொரு பெறுமதியும் கிடைக்காமை கவலைக்குரிய விடயம் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் அரசாங்கம் சீன கம்பனியுடன் ஏற்படுத்த உத்தேசித்துள்ள உடன்படிக்கை தொடர்பில் மிக தவறான புரிதல் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டின் ஒரு அங்குல நிலப்பரப்பையும் எந்தவொரு நாட்டுக்கோ, கம்பனிக்கோ உறுதிப்பத்திரம் மூலம் உரித்தளிப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

 

வரலாற்றில் எந்தவொரு ஆட்சியாளரும் மேற்கொள்ளாதவாறு நாட்டின் நிலம் வேறு நாடுகளுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டதாகவும், கொழும்பு போட்சிற்றி திட்டத்துக்காக 200 ஏக்கர் சீன கம்பனிக்கு முழு உரித்தாக வழங்கப்பட்டிருந்ததுடன், அந்த நிலையை குத்தகை அடிப்படையில் தற்போதைய அரசாங்கமே மாற்றியது. அன்று எவரும் இதற்காக வேலை நிறுத்தமோ, ஆர்ப்பாட்டமோ செய்யவில்லை என்றும் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் அனைவருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ள போதிலும் சிறு குழுவினரின் நடவடிக்கை காரணமாக கூடுதலானோர் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. அடுத்த சில ஆண்டுகளில் மக்களுக்காக வழங்கவுள்ள நலன்புரி செயற்பாடுகளை பிரகடனப்படுத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஹிரியால, மீஹகஅல ஆரம்ப பாடசாலை மற்றும் தித்தவெல்ல ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலையங்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 

ஜனாதிபதி அவர்கள் கொழும்புக்கு திரும்பும் போது இப்பாகமுவ மத்திய கல்லூரியின் அபிவிருத்தி செயற்பாடுகளை கண்காணித்ததுடன், அதிபருடன் உரையாடி அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

 

அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார, வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ, வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்க, குருணாகல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் எம்.எஸ்.எம்.பாஹிம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்