2 (15)

நாட்டில் பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 

இன்று (16) முற்பகல் ஹம்பாந்தோட்டை புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை மக்களின் காணி உரிமையை உறுதிசெய்யும் ‘ரன்பிமக்க உருமய’ காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

விவசாய நாடாக எமது நாட்டிலுள்ள காணிகளை உற்பத்தி நடவடிக்கைகளுக்காக சரியாகப் பயன்படுத்துவது அவசியமானதாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கு அது மிகவும் முக்கியமான காரணியாகும் எனத் தெரிவித்தார்.

 

மனித உரிமையான காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாரபட்சமாக நடந்துகொள்ள வேண்டாமென ஜனாதிபதி இதன்போது அனைத்து அரசியல்வாதிகளிடமும் கேட்டுக்கெண்டார்.

 

ஒவ்வொருவரது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அல்லாமல் நாட்டுக்குப் பொதுவான அபிவிருத்தி நடவடிக்கைகளினூடாக இன்று நாட்டில் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய தடைகள், சவால்கள் வந்தபோதும் அந்த நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

இன்று இணக்க அரசாங்கம் முழு உலகிற்கும் முன்மாதிரியாக இருந்து வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இதன் முக்கியத்துவம் இன்றை விட நாளை அனைவரும் பேசுகின்ற ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டார்.

 

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் மத்தியதர விவசாய சமூகத்திற்கு குடியிருப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த காலத்தில் வழங்கப்பட்ட மற்றும் மிக நீண்ட காலமாக அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட காணிகளின் சட்ட ரீதியான உரிமையைப் பெற்றுக்கொடுத்து 10 ஆயிரம் காணி உறுதிகள் இவ்வருடம் வழங்கப்படவிருப்பதுடன், இதன் முதற்கட்டத்தின் கீழ் இன்று காணி உறுதிகள் மற்றும் 2946 கொடுப்பனவுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதனை அடையாளப்படுத்தும் வகையில் அம்பலாந்தோட்டை, அங்குனகொலபெலஸ்ஸ, தங்காலை  வலஸ்முல்லை, வீரகெட்டிய, கட்டுவன மற்றும் மகாவலி அதிகார பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பயனாளிகளுக்கு இதன்போது ஜனாதிபதி அவர்களினால் காணி உறுதிகள் வழங்கிவைக்கப்பட்டன,

 

அமைச்சர் மஹிந்த அமரவீர, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா, தென் மாகாண காணி அமைச்சர் சந்திம ராசபுத்திர, தென்மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தென்னகோன் நிலமே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

இதே நேரம் உள்ளக விவகாரங்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி, கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பலாந்தோட்டை புதிய கலாசார மத்திய நிலையம் இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

 

நினைவுப்படிகத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு முதலாவது அங்கத்தவரை பதிவு செய்யும் நடவடிக்கையையும் ஆரம்பித்து வைத்தார்.

 

அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, மஹிந்த அமரவீர, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் த சில்வா, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி சுவர்ணபால ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1 (18) 3 (17) 4 (12) 5 (15) 6 (11) 8 (12) 9 (9)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்