01 (39)

பருவமற்ற காலத்தில் உருளைக்கிழங்கு செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதைகளுக்கு 50 வீத சலுகை வழங்க ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரிய துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு, மேற்கொள்ளப்படவுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மற்றும் செயற்படுத்தல் திட்டத்தினை தயாரித்தல் தொடர்பாக இன்று பிற்பகல் (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.

 

நாட்டில் உருளைக்கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் பருவத்தில் வெளிநாட்டிலிருந்து உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கு விவசாய அமைச்சும் வர்த்தக அமைச்சும் இணைந்து விசேட செயற்திட்டமொன்றினை தயாரிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

 

கடந்த ஒன்றரை வருட காலத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெற்களை வழங்கும் விசேட செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

 

கால்நடை மருத்துவர்களினால் மேற்கொள்ளப்படுவரும் வேலைநிறுத்தம் தொடர்பாக இதன்போது கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் அதனைத் தீர்ப்பதற்கு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

 

பிரதேச செயலகங்களினால் கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதற்கு கால்நடை மருத்துவர்களின் சிபாரிசு அவசியமாகும் என்பதுடன், கால்நடை மருத்துவர்களின் வேலை நிறுத்தம் இடம்பெறும் காலத்தில் பிரதேச செயலகங்களினால் அத்தகைய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பின் அவை எவ்வாறு வழங்கப்பட்டன என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

 

பசுக்களை கொலை செய்தல் பால் உற்பத்தி துறையில் பெரும் பாதிப்பாக காணப்படுவதனால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

 

விவசாயம், மகாவலி மற்றும் சுற்றாடல், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள், கிராமிய கைத்தொழில், நீர்ப்பாசன மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்களினால் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான நீண்ட கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.

 

தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டம் மூன்றாண்டு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் கிராம சக்தி மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைந்து உரிய செயற்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

 

சகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் இச்செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், மாவட்ட செயலாளர்கள் நிர்வாகத்தில் மட்டுமன்றி அபிவிருத்தியிலும் பங்கெடுக்க வேண்டுமெனவும் பிரதேச அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பினை இச்செயற்பாட்டில் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இக்கலந்துரையாடலின்போது தெளிவுபடுத்தினார்.

 

தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்திற்கு சகலரும் முன்னுரிமையளித்து செயற்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், 2017-2018 பெரும்போகத்தில் சிறந்த விவசாயியை தேர்ந்தெடுப்பதற்கான செயற்திட்டமொன்றினை விவசாய மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கினார்.

 

மேலும் தேசிய உணவு உற்பத்தி புரட்சியின் கீழ் சகல வெற்றுக்காணிகளையும் பயிர்செய்கைக்காக பயன்படுத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

02 (44)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்