20

ஒழுக்கப் பண்புகளுடன்கூடிய அநேக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்வகையில் ஒரு சிறுபிரிவினரால் அசாதாரணமான முறையில் செயற்படுத்தப்படும் பகிடிவதையைத் தடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது. இதனை குறைபாடுகளின்றி அரசு நிறைவேற்றிவரும் நிலையில் முறையற்ற நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகங்களில் இடமளிக்கமுடியாது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற மத்துகம, ஆனந்த தேசிய கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானபீட மாணவர்களினால் புதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அசாதாரணமான பகிடிவதை, இலவச கல்வியின் ஒரு சாபக்கேடு எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் இந்நிகழ்வு தொடர்பாக தான் கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணை மேற்கொண்டதுடன் மிலேச்சத்தனமான இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கல்விமான்கள் மற்றும் மேதைகளை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் கௌரவத்தை பாதிக்கும் இவ்வாறான செயல்கள் இலவசக்கல்விக்கு செய்யப்படும் அவமதிப்பு என வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், எமது நாட்டின் 40-50 வருடகால பல்கலைக்கழக வரலாற்றில் பகிடிவதை தொடர்பாக கரும்புள்ளிகள் காணப்படுவதோடு பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அவர்களது பெற்றோரின் நிம்மதியை துயரக்கண்ணீராக மாற்றும்வகையில் மாணவர்கள் செயற்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் கொழும்பை அண்டிய பல பாடசாலைகள் பிரித்தானிய இராணுவ முகாம்களாக மாறிய சந்தர்ப்பத்தில் கோட்டை ஆனந்த தேசிய கல்லூரியின் கிளையாக 1942 பெப்ரவரி 23 ஆம் திகதி மத்துகம ஸ்ரீ சுதர்சனாராம விகாரையில் மத்துகம ஆனந்த தேசியக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

அன்று தொடக்கம் உள்நாட்டு, வெளிநாட்டு கல்விமான்கள் பலரை உருவாக்கிய பெருமைமிகு வரலாற்றிற்கு உரிமைகோரும் மத்துகம ஆனந்த தேசிய பாடசாலையின் செயற்பாடுகளை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.

கல்லூரி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மத்துகம ஆனந்த தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், முன்னாள் நிதி மற்றும் நீதி பிரதி அமைச்சருமான தயா டி பெஸ்குவெல் அவர்களின் சிலையையும், நினைவுப்பலகையையும் ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்துவைத்தார்.

மேலும், கல்லூரியின் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடமும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இப்பாடசாலை மாணவன் ஒருவரால் வரையப்பட்ட ஜனாதிபதி அவர்களின் உருவப்படமும், நிகழ்வின் நினைவுப் பரிசும் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், பாடசாலையின் அதிபர் ரந்துன் ஜயலத், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

02 (19)

01

03

05

06

07

08

09

10

11

12

14

15

16

17

18

19

20

21

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்