01-1

இலங்கை தற்போது பல துறைகளிலும் அடைந்துவரும் முன்னேற்றங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டைப் பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் செயற்பாடுகள் பற்றிய உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey  Feltman) தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள ஜெப்ரி பெல்ட்மன் அவர்கள் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்திந்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வரட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை மாற்றங்களினால் எதிர்கொள்ள நேரிட்ட நெருக்கடிகள் மற்றும் வடக்கு, தெற்கு பிரதேசங்களில் காணப்படும் சில இனவாத சவால்களுக்கு மத்தியில் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் உதவிப் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

தனது மூன்று நாள் விஜயத்தின்போது சமூகத்தின் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட ஜெப்ரி பெல்ட்மன் அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக தான் போதிய புரிந்துணர்வுடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படாதவாறு நல்லிணக்கத்தை பலப்படுத்துவது தனது நோக்கமாகுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு அரசினால் வழங்கப்படும் வீடுகள் மற்றும் காணிகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என வடக்கிலுள்ள இனவாத குழுக்கள் அந்த மக்களுக்கு அழுத்தங்களை வழங்குவதுடன், நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என தெற்கிலுள்ள சிறு இனவாதக் குழுக்கள் அரசாங்கத்தின் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் அந்த இனவாதிகள் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளினால் விடுக்கப்படும் சவால்களை கருத்திற்கொள்ளாது தமது செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டுசென்று மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 07 தசாப்தங்களாகக் காணப்படும் தொடர்புகளில் இலங்கை பல்வேறு மட்டங்களில் தமது அமைப்பிற்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த உதவிப் பொதுச்செயலாளர் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கு ஏற்ப இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், இலங்கையின் ஒத்துழைப்பை தான் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

உதவிப் பொதுச்செயலாளர் தனது விஜயத்தின்போது இலங்கை பற்றிய பல தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று இதன்போது தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், உண்மையான தகவல்களைப் போன்றே சில பொய்யான தகவல்களும் அவற்றுள் காணப்படலாம் என்றும், எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மீதுகொண்டுள்ள பக்கச்சார்பற்ற எண்ணங்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்து போயுள்ள இரண்டரை வருட காலத்திற்குள் நாட்டிற்கும், மக்களுக்கும் பாரிய செயற்பாடுகளை ஆற்றியுள்ளதாக தன்னால் அறிந்துகொள்ள முடிந்தபோதிலும் அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த பணிகள் பற்றிய தகவல்கள் உரியவாறு மக்களைச் சென்றடைவதில்லையென தான் உணர்வதாக உதவிப் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.  

தனக்கும் அத்தகையதொரு எண்ணமே காணப்படுவதாக உறுதிப்படுத்திய ஜனாதிபதி அவர்கள் முன்னேற்ற செயற்பணிகள் குறித்து மக்களை தெளிவூட்டுவதற்கான தொடர்பாடல் செயன்முறையை பலப்படுத்த ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான படைக்கு இலங்கையிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பு தொடர்பாக உதவிப் பொதுச்செயலாளர் தனது பாராட்டைத் தெரிவித்ததுடன், இதன்பொருட்டு இணைத்து கொள்ளப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு தொடர்பாக கண்டறியுமாறும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பொர்ணான்டோ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எசல வீரக்கோன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வசிப்பிட ஒருங்கிணைப்பாளர் ஊனா மெக்கொலி அம்மையார் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்