08

பாடசாலைப் பிள்ளைகளே பேண்தகு அபிவிருத்தியின் சமூக பொறுப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றும் செயற்பாட்டில் உண்மையான செய்தியாளர்கள் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (19) முற்பகல் திகன, கெங்கெல்ல மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ‘பேண்தகு அபிவிருத்தி பாடசாலை கழகங்களை நிறுவும் செயற்திட்ட’ ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்துக்காக உடனடியாக செயற்பட வேண்டிய காலம் இதுவே என்பதனால் எம்மால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டுமென  தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை ஒருபோதும் ஒத்திப் போடக் கூடாதெனவும் தெரிவித்தார்.

அபிவிருத்தியை நோக்கிய செயற்பாடுகளின் போது பூமி வெப்பமடைந்து, வளிமண்டலம் மாசடைந்து மனித சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது, எமக்கு எச்சரிக்கை விடுக்கும் மற்றும் ஆலோசனை வழங்கும் உலக வல்லரசுகளே எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இயற்கை மற்றும் சுற்றாடல் பெறுமானங்களை மதிக்காமல் அவர்கள் செயற்படுவதனால் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதில் பெரும் சவாலுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுற்றாடல் வளத்தை பாதுகாக்கும் நாடாக மாறுவதாயின் எமது நாட்டின் வனப்பகுதிகளை ஆகக்குறைந்தது நூற்றுக்கு ஐம்பது வீதமாக அதிகரிக்க வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்காவிட்டால் எமது எதிர்காலமும் பாரதூரமான சவாலுக்கு உள்ளாகும். அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பை கருத்திலெடுக்காமல் செயற்பட்ட அனைவரும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பேண்தகு அபிவிருத்தியுடன் சுபீட்சமான, ஒழுக்கநெறிமிக்க தேசத்தை உருவாக்கும் செயற்திட்டத்தின் முதன்மைத் துறையாக பாடசாலைப் பிள்ளைகளை தெளிவூட்டல் மற்றும் அவர்களது நடத்தையை மேம்படுத்தல் இனங்காணப்பட்டுள்ளது. அதற்காக  ‘பேண்தகு அபிவிருத்தி பாடசாலை கழகங்களை நிறுவும் செயற்திட்டம்’ அமுல்படுத்தப்படுகிறது.

‘அழகிய சிறுவர் உலகம் – பேணிப்பாதுகாக்கப்பட்ட எதிர்காலம்’ எனும் மகுட வாசகத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சின் வழிகாட்டலில் மாகாண கல்வி அமைச்சுக்களின் மேற்பார்வையில் இச் செயற்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் 3409 பேண்தகு அபிவிருத்தி பாடசாலை கழகங்களை நிறுவும் செயற்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பாடசாலைப் பிள்ளைகளை ஆபத்தான நடத்தைகளிலிருந்து விலக்கி வேலை செய்யும் உலகுக்கும் சமூகத்துக்கும் பழக்கப்படுத்துதல் மற்றும் பாடசாலைப் பிள்ளைகளை சமூக மாற்றத்துக்கான காரணிகளாக வலுவூட்டுதல் இச் செயற்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

காணி, நில பயன்பாடு தொடர்பான புரிந்துணர்வை வழங்குதல், பாடசாலைத் தோட்டத்தை உற்பத்தி அலகாக மாற்றுதல் மற்றும் அழகிய, தூய்மையான, ஆரோக்கியமான பாடசாலைச் சூழலை ஏற்படுத்துதல், பாடசாலை நிலம் மற்றும் சுற்றாடலில் பேண்தகு அபிவிருத்தி ஊடாக பெற்றுக் கொள்ளும் அனுபவங்களை தமது வீட்டுக்கு கொண்டுசெல்லும் மாற்றுக் காரணிகளாக பாடசாலைப் பிள்ளைகளை வலுவூட்டுதல், போதைப்பொருள் மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான பாடசாலைப் பிள்ளைகளை தெளிவூட்டுதல், தற்பாதுகாப்புக்காக பிள்ளைகளை வலுவூட்டுதல், பேண்தகு அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக்கூடியவாறு அறிவு, ஆற்றல் மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தி, பிள்ளைகளிடையே சிறந்த நடத்தைகளை விருத்தி செய்தல் போன்றவை ஏனைய இலக்குகளாகும்.

பேண்தகு பாடசாலை செயற்திட்ட வழிகாட்டல் கோவை ஜனாதிபதி அவர்களால் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேண்தகு பாடசாலை செயற்திட்டம் தொடர்பான இணையதளம் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேண்தகு பாடசாலை செயற்திட்டத்தின் ஐந்து மாணவ குழு தலைவர்களுக்கு  பேண்தகு பாடசாலை செயற்திட்ட வழிகாட்டல் கோவை, சிறுநீரக நோய் தடுப்புக்கென தயாரிக்கப்பட்ட நூல் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வழங்கப்படும் கழிவுப்பொருள் சேகரிப்பு கொள்கலன் ஆகியவை ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

ஐந்து பாடசாலைகளுக்கு அறிவுப் போட்டிக்காக விதந்துரைக்கப்பட்ட புத்தக தொகுதி, பேண்தகு அபிவிருத்தி செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான உபகரணங்கள், சிறுநீரக நோய் காரணமாக பெற்றோரை இழந்த உயர்தரம் கற்கும் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கல் மற்றும் பத்து பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் தொலைக்கட்டுப்பாட்டு கருவி மூலம் இயக்கப்படுதல் போன்றவையும் ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

கெங்கல்ல மகாவித்தியாலய மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்டிருந்த பண்ணையையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டு, மாணவர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடினார்.

அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியல்ல, அகில விராஜ் காரியவசம், எம்.எச்.அப்துல் ஹலீம் ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

04

05

06

08

09

10

11

12

14

16

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்