Presidential Media Unit Default Banner

பாடசாலை மாணவர்களின் சீருடையை மாற்றியமைத்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி, அஸ்கிரிய ஶ்ரீ சந்ரானந்த பௌத்த வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (16) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரிவெனாக்கள் மற்றும் விகாரைகளை மையமாகக் கொண்ட கல்வி முறையானது தியாகம், கருணை மற்றும் மனிதாபிமானத்தினால் அன்று இலங்கை நாட்டை போஷித்ததுடன், சமய வழிபாட்டுக்களுடன் ஒன்றிய சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அனைத்து சமயத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

புதிய தொழில்நுட்பங்களுடன் சமூகம் தழுவிக்கொண்டுள்ள இணையம் மற்றும் பேஸ்புக் என்பன இன்று பிள்ளைகளின் விழுமியப் பண்புகள் மற்றும் நற்குணங்களை அழித்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் கல்வியுடன் பிள்ளைகளின் அறிவையும், ஒழுக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இணையம் மற்றும் சில ஊடகங்களினூடாக இன்று இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையே வேற்றுமையை விதைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எந்தவொரு தனி நபரோ அல்லது அமைப்போ மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வார்களாயின் அவர்கள் எந்த சமயத்தவராகவோ அல்லது இனத்தவராக இருப்பினும் அது அவர்களது நாகரிகம் மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினையாகும் என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 166 கிறிஸ்துவ தேவாலயங்கள் கடந்த சில மாதங்களுக்குள் தாக்கப்பட்டதாக நபர் ஒருவர் தெரிவித்தமை தொடர்பாக தான் பல விடயங்களையும் நன்கறிந்த அதிவண. பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்களிடம் வினவியதுடன், அத்தகையதொரு நிகழ்வு பதிவாகவில்லையென அவர் தெரிவித்ததுடன், மக்களை திசை திருப்புவதற்காக இவ்வாறான பொய் பிரசாரங்கள் வெளியிடப்படுவதை தான் மிகவும் கண்டிப்பதாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்திய பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் சான்றிதழ்களையும், பரிசில்களையும் வழங்கினார்.

அஸ்கிரிய பிரிவின் மகா நாயக்கர் வண. வரக்காகொட ஞானரதன தேரர், மல்வத்து பிரிவின் அனுநாயக்கர் வண. நியங்கொட விஜிதசிறி தேரர், சந்ரானந்த பௌத்த வித்தியாலயத்தின் அதிபர் கலாநிதி வண. கொடகம மங்கள தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, எஸ்.பீ. திசாநாயக்க, விஜயதாச ராஜபக்‌ஷ ஆகியோர் உள்ளிட்ட குழுவினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்