1 (11)

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தற்போது குறித்த அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், பிரச்சினைகள் இருக்குமானால் அவற்றைத் தீர்க்கும்வரை கல்வி நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என தான் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கங்களிடமும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

 

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையே இன்று(16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வைக்கப்படக்கூடிய முன்மொழிவுகள் தொடர்பில் மாணவ  சங்கப் பிரதிநிதிகள் விரிவாக தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.

 

மாணவ சங்கங்கள், பீடாதிபதிகள், இலங்கை மருத்துவப் பேரவை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பிரனரதும் கருத்துக்களை கேட்டறிந்து இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

கடந்த அரசாங்க காலத்தில் இந்த தனியார் மருத்துவக்கல்லூரி தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டதாகக் குறிப்பிட்ட மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஆட்சியிலிருந்த அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லையென்றும் நாட்டின் இலவசக் கல்வியைப் பலப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தரும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டனர்.

 

ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக அண்மையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அரசாங்க பல்மருத்துவ அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கருத்துக்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்;.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்